ஆயுதங்களுடன் வந்த கல்லூரி மாணவர்கள் கைது

by Radha, Jun 19, 2018, 18:25 PM IST

சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரிகளுக்கு செல்ல முயன்ற மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர், அண்ணா சதுக்கம் முதல் நந்தனம் வரை செல்லும் பேருந்தில் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடியபடி சென்றதாக தெரிகிறது. இதேபோல, அமைந்தகரை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் சென்றதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து 3 இடங்களிலும் சுமார் 100 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 31 மாணவர்களை எச்சரித்த போலீசார், அவர்களை கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர். ஆயுதங்கள் வைத்திருந்ததாக 8 மாணவர்கள் மீது பூக்கடை, அமைந்தகரை, அண்ணாநகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், பேருந்தில் கூச்சலிட்டபடி சென்ற கல்லூரி மாணவர்கள் சிலரை மடக்கிப்பிடித்தனர். அவர்களுள் சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், போலீஸ் கட்டிங் போல முடிவெட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘யாரோ சிலர் செய்த தவறுக்கு, ஒன்றுமே செய்யாத தங்களை தண்டிப்பது நியாயமா’ என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More Crime News


அண்மைய செய்திகள்