ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டிபட்டியில் அமமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று இரவு முதல் இன்று காலை 5.30 மணி வரை நடத்தப்பட்ட சோதனை குறித்த விபரங்களை வருமான வரித்துறையினர் விலாவாரியாக பட்டியலிட்டுள்ளனர். ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ 2 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்ட தகவல் தெரிந்து சோதனை நடத்தப்பட்டது என்றும், சோதனையில் ரூ 1.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டது என வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு தலா 300 ரூபாய் வழங்குவதற்காக பெயர், வார்டு, ஊர் என எழுதி 94 பைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ 1. 48 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும், மீதிப் பணத்தை, சோதனையின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அமமுகவினர் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி உள்ளிட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம் அமமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சோதனை குறித்து அவசர, அவசரமாக வருமான வரி அதிகாரிகள் விலாவாரியாக பட்டியலிட்டுள்ளதுடன், அதனை அறிக்கையாகவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனராம்.
இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன், அதிமுக சார்பில் லோகிராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர்.