ஈரோடு ஜவுளி சந்தையில் 75 சதவீத ஜவுளி விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பிரசித்தி பெற்ற ஈரோட்டில் தமிழகத்தின் எல்லா மாவட்ட வியாபாரிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாக ஜவுளி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில நாட்களுக்கு மின் இங்குள்ள சந்தையில் விற்பனை தொடங்கியது.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது. அண்டை மாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தாலும், வெளி மாவட்ட வியாபாரிகளின் வரத்து கடந்த சில வாரங்களாக அதிகரித்தது. இதனால், வழக்கமாக ஆண்டு தோறும் நடைபெறும் தீபாவளி பண்டிகைக்கான விற்பனையில் 65 முதல் 75 சதவீதம் அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு உள்ளூர் சில்லறை விற்பனையும் அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கால் கடும் பாதிப்பைச் சந்தித்த ஜவுளி வியாபாரிகள் தீபாவளி விற்பனை சூடு பிடித்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.