ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும்.
சில எளிய வழிகளை தவறாமல் கடைப்பிடித்தால் ஆரோக்கியம் நம் கைவிடாது. சாப்பிடும்போது கைக்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்:
சம்மணமிட்டு அமருங்கள்: சாப்பிடும்போது தரையில் கால்களை குறுக்காக வைத்து அமர வேண்டும். இது சுகாசனம் என்ற யோகாசன முறையாகும். தியானம், தவம் புரிவோர் இம்முறையில் அமர்வர். சம்மணமிட்டு அமரும்போது முதுகுத் தண்டு சரியான கோணத்தில் இருக்கும். முதுகு தசைகள் மற்றும் இடுப்பு எலும்பு ஆகியவை சரியான விதத்தில் நீண்டு, நிலைபெறும். காலப்போக்கில் அவை உறுதியாகும்.
சிறுபிராயத்திலிருந்தே இம்முறையில் அமர்ந்து சாப்பிட்டு பழகினால் வளரும்போது தசைகள் விளையாடுவதற்கு உகந்தவையாக உறுதியும் தளர்வு தன்மையும் பெறும். இடுப்பு எலும்புகள் நெகிழும்தன்மை கொண்டவையாக மாறுவதால் தடுமாறி விழும் வாய்ப்பு குறையும். கால்களை குறுக்காக வைத்து அமர்ந்து உண்ணும்போது வயிற்றுக்கு அதிக இரத்தம் செல்கிறது. இதன்மூலம் செரிமானம் நன்கு நடக்கிறது.
சிதறாத கவனம்: சாப்பிடும்போது உணவை தவிர வேறு எதிலும் கவனம் செல்லக்கூடாது. சிலர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், வேறு சிலர் ஸ்மார்ட்போனை கையில் வைத்துக்கொண்டும் சாப்பிடுவர். தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன், ஐபாட், லேப்டாப் என்னும் மடிக்கணினி என்ற எந்த சாதனத்தையும் பார்த்துக்கொண்டு உணவு உண்ணவேண்டாம். சாப்பிடும்போது வேறு செயல்களில் ஈடுபடுவதால் என்ன நடக்கிறது
என்பது குறித்து ஓர் ஆய்வு ஐந்து ஆண்டுகள் செய்யப்பட்டது.
குழந்தைகளின் படுக்கை அறையில் தொலைக்காட்சி இருந்தால், வளரும்போது இதயநோய், உடல் பருமன் ஆகிய குறைபாடுகள் வரலாம். உழைக்கக்கூடிய உடல்வாகு அமையாது.
சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர் சிறுமியர் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அதிகம் அருந்துவர். இதுவும் பிற்காலத்தில் உடல்நலக்கேட்டுக்கு காரணமாகும்.
பெண் பிள்ளைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமுடையவர்களாயின், உடல் கட்டமைப்பில் எதிர்மறை விளைவுகள் உருவாகும்.
ஒருநாளைக்கு தவிர்க்க இயலாத சூழல் இல்லாத பட்சத்தில் அரைமணி நேரத்திற்குமேல் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
தொலைக்காட்சி பார்ப்பதற்கு பதிலாக, குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டால் குடும்ப உறவு பலப்படும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ருசித்து உண்ணுங்கள்: உணவை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். உணவின் நறுமணத்தை முகர்ந்து, கைகளால் உணவை எடுத்து நன்றாக மென்று, சுவையை அனுபவித்து சாப்பிடவேண்டும். சாப்பிடும்போது உணவின்மேல் கவனம் வைத்தால் ஊட்டச்சத்து உடலில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
சாப்பிடும்போது முழு கவனத்தையும் அதில் வைத்தால், மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் லெப்டின் என்னும் ஹார்மோன் நன்கு வேலைசெய்யும். இன்சுலின் தடுப்பாற்றல் போல, லெப்டின் சுரப்பு தடுக்கப்பட்டால் உடல் பருமன் மற்றும் பரவாத வியாதிகள் ஏற்படவும் வாய்ப்புண்டாகும்.
ஆரோக்கிய உணவு, சாப்பிடும் முறை, லெப்டின், குடும்ப உறவு