நெய்: தவிர்க்கவேண்டிய உணவு பொருளா?

by SAM ASIR, Jun 21, 2019, 09:25 AM IST
Share Tweet Whatsapp

பெரும்பாலும் இன்றைய இளம்தலைமுறையினர் நெய்யை குறித்து தவறான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். நெய்யின் தன்மைகள் குறித்த சரியான புரிதல் இல்லாததால் நெய் பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கின்றனர்.

நெய் நம் நாட்டில் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்க நிறமான, நறுமணம் கொண்ட, ஊட்டச்சத்துகள் நிறைந்த நெய்யில் என்னென்ன நன்மைகள் உள்ளன தெரியுமா?

லாக்டோஸ் இல்லை: பாலில் லாக்டோஸ் என்னும் ஒருவித சர்க்கரை உண்டு. சிலருக்கு அது ஒத்துக்கொள்ளாது. லாக்டோஸை செரிக்கக்கூடிய ஆற்றல் சிலருக்கு இருக்காது.

லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள நபர்கள் பலரை நம்மால் காண இயலும். லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாத நபர் கூட நெய்யை தைரியமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பால் சார்ந்த பொருள்களிலுள்ள லாக்டோஸை நீக்கி எப்படி பயன்படுத்துவது என்பதை நம் முன்னோர்களே கண்டுபிடித்துள்ளனர். அதுதான் நெய். நெய் தயாரிப்பின்போது லாக்டோஸ் நீக்கப்படுகிறது. ஆகவே, லாக்டோஸ் இல்லாத இந்த அருமையான உணவு பொருளை தைரியமாக சாப்பிடலாம்.

காஸின் இல்லை: காஸின் என்பது பாலிலுள்ள புரத கூட்டுப்பொருளாகும். பாலால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு காஸினே காரணம். காஸின் சரியாக செரிக்கவில்லையெனில் மூளையை போதை போன்ற ஒருவித மயக்கநிலைக்கு உள்ளாக்கிவிடும். நெய் தயாரிப்பின்போது லாக்டோஸ் மட்டுமின்றி காஸினும் மேலே மிதக்கிறது. ஆகவே, அவற்றை எளிதாக அகற்ற முடிகிறது. இந்திய பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் நெய்யில் லாக்டோஸ் என்னும் சர்க்கரை, காஸின் என்னும் புரதம் ஆகியவை இருக்காது.

பூரித கொழுப்பு:

சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்கள் பூரிதமற்றபலபடித்தான கொழுப்பு கொண்டவை. அவை பல்வேறு விதமான இரட்டைபிணைப்புகளால் உருவாக்கப்பட்டவை. ஆகவே, சமையல் செய்யும்போது குறைந்த நிலைத்தன்மையுடன் காணப்படும். நெய், பூரிதமான கொழுப்புள்ளதால் சமையலின்போது நிலைத்தன்மையுடன் காணப்படும்.

இதயநோயும் இரத்தஅழுத்தமும்:

பூரிதகொழுப்பு எந்தவித இதயநோய்க்கும் காரணமாகாது என்று பற்பல ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதயத்தில் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம் கொண்டோரும் நோய் தீவிரமாகிவிடுமோ என்ற கவலை கொள்ளாமல் நெய் சாப்பிடலாம்.

வைட்டமின் ஏ: புல் போன்ற தாவரங்களை உண்ணும் விலங்குகளின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருள்களில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் இருக்கும். பாலைவிட நெய்யில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. ஹார்மோன் சமநிலை, கருவுறுதல், ஆரோக்கியமான ஈரல், உடலின் தாங்குதிறன் ஆகியவற்றுக்கு வைட்டமின் ஏ அவசியம். அதை நெய் தருகிறது.


Leave a reply