‘‘எல்லோருக்கும் பொதுவானது யோகா. இது ஏழைகளுக்கும் பலனளிக்கும்’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரபாத் தாரா மைதானத்தி்ல் நடந்த நிகழ்ச்சியை காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சூரியனின் முதல் கதிர்களை யோகா பயிற்சியாளர்கள் வரவேற்கிறார்கள். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், மனதிற்கு தெம்பையும் தருகிறது.
யோகா எல்லோருக்கும் பொதுவானது. ஏழைகளுக்கும் பலனளிக்கக் கூடியது. யோகா பயிற்சி மேற்கொள்ளுவதால் உடல்நலம் சீராக இருக்கும். யோகாவின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம். இது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை நவீன யோகாவை கொண்டு செல்வோம்’’ என்றார்.
பிரதமர் மோடி தனது பேச்சை முடித்து கொண்டு யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் மற்றும் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.