காலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள்

Top 5 Carb Rich Foods For Breakfast

Jul 2, 2019, 19:05 PM IST

உடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம்.

கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் அடங்கிய பொருள்களை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு அவசியம். ஐம்பது விழுக்காட்டுக்கு குறைவான ஆற்றலை (கலோரி) தரக்கூடிய கார்போஹைட்ரேட் உணவு பொருள்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். நார்ச்சத்து மிக்க கார்போஹைட்ரேட் உணவு பொருள்கள் சரியான உடல் எடையை பராமரிக்க உதவும். நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் உணவு பொருள்கள் எளிதாக செரிமானம் ஆகும்.

ஆப்பிள்:

நிறம், சுவை மற்றும் அளவுகளில் வேறுபாடு இருந்தாலும், பொதுவாக ஆப்பிள் பழத்தில் 13 முதல் 15 விழுக்காடு கார்போஹைட்ரேட் உள்ளது. அதனுடன் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன. ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உள்ளன. சிலவகை புற்றுநோய்கள், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆப்பிள் குறைக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்துகள் நிரம்பப்பெற்றது. உடல் நலத்தைப் பேணக்கூடிய நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி5, வைட்டமின் ஏ, மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் உள்ளன. பூரித கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை இதில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் இருப்பதால் தினமும் காலை உணவாக இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் 23 விழுக்காடு கார்போஹைட்ரேட் உள்ளது. காயாக இருக்கும்போது அதிக அளவில் காணப்படும் ஸ்டார்ச் பழுக்கும்போது சர்க்கரையாக மாறிவிடுகிறது. கார்போஹைட்ரேட்டுடன் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இவற்றுடன் தாவர கூட்டுப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.

கீன்வா:

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட தானியம் கீன்வா. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், தாவர கூட்டுப்பொருள்கள் மற்றும் தாதுகள் அடங்கியுள்ளன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

ஓட்ஸ்:

முழு தானிய வகையை சேர்ந்த ஓட்ஸில் தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் உள்ளன. 66 விழுக்காடு கார்போஹைட்ரேட்டும் 10 விழுக்காடு நார்ச்சத்தும் இதில் உள்ளன. கொலஸ்ட்ரால் என்னும் ஒருவகை கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

இவற்றை காலையில் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

You'r reading காலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை