சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிடலாமா?

by SAM ASIR, Aug 1, 2019, 17:07 PM IST
Share Tweet Whatsapp

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

இது நீரிழிவு பாதிப்பு இல்லாவிட்டாலும் அடுத்தக் கட்டம் இன்சுலின் போதாத நிலையிலான இரண்டாம் வகை சர்க்கரை நோயாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம். நீரிழிவு என்பது உடலில் இன்சுலினை சர்க்கரை மேற்கொண்டுவிட்டதன் அறிகுறியே. இரத்தத்தில் உள்ள சர்க்கரை, இனி ஆற்றலாக மாற்றப்படாது. ஆனால், எல்லா செயல்பாடுகளுக்கும் சர்க்கரை அவசியம். ஆகவே, அதை முற்றிலுமாக புறந்தள்ள இயலாது.

நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் தொடர்ந்து இதயம், சிறுநீரகங்கள், கணையம் போன்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். மூளையில் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு சராசரி ஆயுளை காட்டிலும் பத்து ஆண்டுகள் ஆயுள் குறையும் என்றும் கருதப்படுகிறது.

நீரிழிவின் வாயிலில் நிற்போர் அதிக எடையுடன் இருப்பின் உடல்எடையில் 4.5 கிலோ முதல் 7 வரை குறைக்கலாம். அதைத் தொடர்ந்து கீழ்க்காணும் உணவுபொருள்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை தின்பண்டங்கள்

மிட்டாய்கள், செயற்கை குளிர்பானங்கள், விருந்தின் இறுதியில் சாப்பிடும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட இனிப்புகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். பழங்களில் உள்ள இனிப்பை மட்டுமே ருசிக்கலாம். பழங்களில் சர்க்கரையுடன் நார்ச்சத்தும் இருக்கிறது. அந்த நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் கலந்திடும் இனிப்பின் அளவை மட்டுப்படுத்துகிறது.

அதிக புரதம் (புரோட்டீன்) உள்ள தின்பண்டங்களையும் பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது.

பழச்சாறு

பழங்கள் சாப்பிடக்கூடியவை. ஆனால், அதை பழச்சாறு வடிவில் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் நார்ச்சத்து முற்றிலும் இருக்காது. முழு பழத்தில் இருப்பதைக் காட்டிலும் பழச்சாறு என்னும் ஜூஸில் சர்க்கரை அதிக செறிவுடன் இருக்கும். பழச்சாறு அருந்தினால் அதை தொடர்ந்து அதிகமாக சாப்பிட நேரிடும்.

வெள்ளை அரிசி, ரொட்டி மற்றும் மாவு

சாப்பிடும்போது இனிப்பாக தெரியாத சில உணவு பொருள்கள் கூட வயிற்றுக்குள் சென்றதும் சர்க்கரையாக மாறி விடும். சுத்திகரிக்கப்பட்ட ஸ்டார்ச் இப்படி சர்க்கரையாக மாறி விடுகிறது. நார்ச்சத்து, தாது சத்து மற்றும் வைட்டமின்கள் நீக்கப்பட்ட வெள்ளை மாவு போன்றவை எளிதாக செரிமானமாகி இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை கலக்கின்றன.
ஒயிட் பிரட், பாஸ்தா மற்றும் வெள்ளை அரிசி ஆகியவற்றை தவிர்த்துவிட்டு, சிவப்பு அரிசி மற்றும் தீட்டப்படாத முழு தானியங்களை சாப்பிடலாம்.

அடர்கொழுப்பு பால் பொருள்கள்

நீரிழிவு வேறு குறைபாடுகளுக்கும் காரணமாகும். இதய பாதிப்பு அவைகளுள் ஒன்று. அதிக கொலஸ்ட்ரால் இதய பாதிப்புக்கு காரணமாகும். நீரிழிவு அப்பாதிப்பை தீவிரமாக்கும். ஆகவே, யோகர்ட் என்னும் சுவையூட்டப்பட்ட தயிர், பாலாடை, பாலாடை கட்டி, வெண்ணெய் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தேங்காய் பாலில் செய்த உணவில் கொழுப்பு குறைவு என்பதால் அதை சாப்பிடலாம்.

பொறித்த உணவு

பொறிக்கப்பட்ட உணவு பொருள்களில் அதிக கொழுப்பு மற்றும் கலோரி என்னும் ஆற்றல் அடங்கியிருக்கும். வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு அளவில் இரத்த சர்க்கரையின் அளவை பாதிக்கும்.

ஃபிரெஞ்ச் ஃப்ரை சாப்பிட்டதும் இரத்த சர்க்கரையின் அளவு உச்சத்தை தொடும். உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைடிரேட் உள்ளது. ஆகவே, பொறிக்கப்பட்ட கோழியிறைச்சியை காட்டிலும் பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அதிக பாதிப்பை உருவாக்கும்.

மற்றபடி உருளைக்கிழங்கு, கோழியிறைச்சி இரண்டுமே நல்லதுதான். ஆனால், பொறித்து உண்பது ஏற்றதல்ல.

மதுபானங்கள்

நீரிழிவு வரக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மதுபானங்களை குறைக்கவேண்டும். வெவ்வேறு வகை மதுபானங்களில் வேறுவேறு அளவுகளில் சர்க்கரை உள்ளது. அதிகமாக மதுபானம் அருந்துவோருக்கு சர்க்கரை நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழுப்பு நிறைந்த இறைச்சி

மாடு, ஆடு போன்ற விலங்குகளின் இறைச்சிகள் பொதுவாக 'ரெட் மீட்' எனப்படுகிறது. நீரிழிவு பாதிப்பு ஏற்படக்கூடியோர் இவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். அதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சியிலுள்ள நைட்ரேட், கணையத்தை பாதிக்கும்.
இறைச்சிகளில் அதிக கொழுப்பு நிறைந்த உடல் பாகங்களை தவிர்க்கவேண்டும். தோல் நீக்கப்பட்ட கோழி மற்றும் வான்கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிடலாம்.


Leave a reply