குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்புள்ள கடமை. பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க மற்றும் பெற்றோர் குழந்தைகளை பேணுவதற்கு வழிகாட்டுவதற்கு பாட்டிமார் இருப்பார்கள். தனி குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டுவதற்கு பெரியவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதில்லை.
குழந்தை என்ன நினைக்கிறது? என்ன உணர்கிறது? என்பதை அறிந்து பெற்றோருக்கு தெரிவிக்கும் ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். தினமும் குறிப்பிட்டவேளையில் குழந்தையின் மனதில் உள்ள எண்ணத்தை பெற்றோர் புரிந்து கொள்ள உதவும் இந்தச் செயலிக்கு 'பேபிமைண்ட்' (BabyMind) என பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைளின் மனநிலை வளர்ச்சி பற்றிய துல்லியமான தகவலை பேபிமைண்ட் செயலி தெரிவிக்கும்.
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை இந்தச் செயலியை பயன்படுத்திய தாய்மார்களை கொண்டு ஓர் ஆய்வு செய்யப்பட்டது. பேபி மைண்ட் செயலியின் மூலம் குழந்தையின் மனவோட்டத்தை புரிந்து கொண்டு விளையாடிய பெற்றோர், குழந்தையோடு மிக நெருங்க முடிந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்தச் செயலியை பயன்படுத்தாத தாய்மாரை, செயலியை பயன்படுத்திய தாய்மாருடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.
இருபதுகளில் தாய்மையடைந்தோர், பதின்ம வயதில் தாய்மையடைந்தோரைக் காட்டிலும் குழந்தைகளோடு நெருக்கமாக இருந்தனர். இளவளது தாய்மார் குழந்தையை புரிந்து கொள்வதற்கு பேபிமைண்ட் செயலி உதவுவதாகவும் இதன் மூலம் அவர்கள் குழந்தையை நன்கு கவனித்துக்கொள்ள முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.