வீட்டிலிருந்து பணி (WFH): உடல் நலத்தை காப்பது எப்படி?

How to maintain health

by SAM ASIR, Aug 19, 2020, 11:27 AM IST

ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து இல்லாதது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் பல நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளிலிருந்தே வேலை செய்யும்படி அனுமதித்துள்ளன.நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.வெளியே நடப்பது, அலுவலகத்தில் செய்யும் சிறு உடலுழைப்பு ஆகியவை தடைப்படுவதால் தசைகளும் எலும்புகளும் அசைவற்றிருக்கும் நிலை ஏற்படுகிறது. சூரிய ஒளி உடலில் படுவதற்கான வாய்ப்பு குறைவதால் போதுமான வைட்டமின் டி சத்து கிடைப்பதில்லை. இதன் காரணமாக உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும்.

வீட்டிலிருந்தே பணி செய்யும்போது உடலை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

சரிவிகித உணவு: கொழுப்புச் சத்து குறைவான, சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) அதிகமாக உள்ள பால் சார்ந்த உணவுப் பொருள்கள், கீரைகள் மற்றும் உலர் பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம். தானியங்கள், முட்டையின் மஞ்சள் கரு, கடல் மீன், ஈரல் போன்ற வைட்டமின் டி சத்து கொண்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். நம் உடல் போதிய சுண்ணாம்புச் சத்தினை உணவுகளிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு வைட்டமின் டி சத்துதான் உதவுகிறது. கால்சியமும் வைட்டமின் டியும் இணைந்து எலும்புகளை ஆரோக்கியமாகப் பராமரிக்கும்.

சூரிய ஒளி: போதுமான வைட்டமின் டி சத்து கிடைப்பதற்கு நம் உடல்மீது வெயில் பட வேண்டும். சூரிய ஒளியிலுள்ள புற ஊதா பி கதிர்கள் (UVB) நம் தோலிலுள்ள செல்களின் கொலஸ்ட்ரால் மீது பட்டு வைட்டமின் டி உருவாக்கத்திற்கான ஆற்றலை அளிக்கிறது. வைட்டமின் டி, சுண்ணாம்புச் சத்தை தக்கவைத்துக்கொள்வதிலும் உடலின் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் காலை 11 முதல் பகல் 1 மணி வரைக்குமான நேரத்தில் சூரிய ஒளியில் புற ஊதா பி கதிர்கள் நல்ல அளவில் அதாவது 290-320 nm அலைவரிசையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உடற்பயிற்சி: தசைகளைப்போன்றே எலும்புகளும் உடற்பயிற்சியின் மூலம் உறுதியாகின்றன. வீட்டிலிருந்து பணி செய்தாலும் மாடியில் நடத்தல், மாடிப்படி ஏறி இறங்குதல், எடையுள்ள பொருள்களைத் தூக்குதல், நடனமாடுதல் ஆகியவற்றைச் செய்யலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்ளலாம். இதுபோன்ற உடற்பயிற்சிகள் எலும்பு தேய்வதைத் தடுக்கின்றன.

வாழ்வியல் முறை: புகை பிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமான மது அருந்துதல் ஆகியவையும் எலும்பை வலுவிழக்கச் செய்யும். இதுபோன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நம்மையுமறியாமல் எலும்புகளுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதற்கும், உடல் சுண்ணாம்புச் சத்தை கிரகித்துக் கொள்வது குறைவதற்கும் காரணமாகும். இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

வீட்டிலிருந்து பணிபுரியும் காலத்தில் சமநிலை உணவுகளைச் சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சி செய்து, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்ளலாம்.

You'r reading வீட்டிலிருந்து பணி (WFH): உடல் நலத்தை காப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை