அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பப்பாளி சாப்பிடுங்கள்!

Health Benifits of Pappaya

by SAM ASIR, Aug 23, 2020, 20:14 PM IST

பப்பாளி, மத்திய அமெரிக்காவில் தோன்றி, கரீபியன் கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பப்பாளியைப் பொறுத்தமட்டில் பழம் மட்டுமல்ல, இலைகள், விதைகள் மற்றும் பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ் பப்பாளியை, "தேவதூதர்களின் பழம்" என்று கூறினாராம்.
பப்பாளியிலுள்ள பாபெய்ன் என்னும் நொதியும் (என்சைம்) மற்ற இன்றியமையாத ஊட்டச்சத்துகளும் இணைந்து அதற்குச் சிறப்பான மருத்துவ தன்மையை அளிக்கிறது.

செரிமானம்

பப்பாளியிலுள்ள பாபெய்ன் என்னும் நொதி, நாம் சாப்பிடும் உணவிலுள்ள புரதங்களை உடைத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு தம்ளர் பப்பாளி சாற்றினை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது.

அழற்சி

பப்பாளியிலுள்ள நொதிகள் அழற்சிக்கு எதிராகச் செயல்படுகின்றன. அவை வயிற்றிலுள்ள அமிலங்களுக்குத் துணை புரிந்து செரிமானத்தைத் தூண்டுவதுடன், அழற்சியையும் குணப்படுத்துகின்றன.

இருதய ஆரோக்கியம்

நம்முடைய உடலில் நோயுண்டாவதற்கு ஃப்ரீ ராடிகல்களே (நிலையற்ற மூலக்கூறுகள்) காரணமாகின்றன. பப்பாளியிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துகள் ஃப்ரீ ராடிகல்களுக்கு எதிராகச் செயல்படுவதால் இருதய ஆரோக்கியத்தையும் புற்றுநோயையும் தடுக்கின்றது. பப்பாளியிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களும் இருதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. எந்த அளவு அதிகமாகப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு இருதயம் ஆரோக்கியம் பெறும்.

நீரிழிவு

பப்பாளியைக் காயாகச் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது என்று அநேக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பப்பாளியிலுள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மொரீஷியஸ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கிரீன் டீ மற்றும் பப்பாளியை எடுத்துக்கொள்வது நீரிழிவு பாதிப்பைத் தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பாற்றல்

வைட்டமின்கள் ஏ, பி சி மற்றும் கே ஆகியவை பப்பாளியில் அதிக அளவில் காணப்படுகிறது. உடல் திசுக்கள், கூந்தல் வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியத்துக்குப் பப்பாளி நல்லது. உடலில் கொலோஜின் என்னும் புரதத்தைச் சீராக வைப்பதற்குப் பப்பாளி உதவுகிறது. நடுத்தர அளவிலுள்ள பப்பாளிப் பழம் ஒன்றே ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்களை போல் இருமடங்கைத் தருகிறது.

சரும அழகு

பப்பாளியின் துண்டுகள் இயற்கையாகச் சருமத்தைச் சுத்தம் செய்வதாகவும் அதிலுள்ள செயல்திறன் மிக்க நொதிகள் (என்சைம்) தோலிலுள்ள அசுத்தங்களை நீக்குவதாகவும் அழகுத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

முடக்குவாதம்: பப்பாளியில் கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகிய தாதுக்கள் உள்ளன. பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் காலப்போக்கில் கால்சியம் கூடுதலாகி, முடக்குவாதம் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் பாதிப்பதைத் தடுக்கின்றன.

எடை குறைப்பு

பப்பாளியில் கலோரி குறைவு. ஆகவே காலையுணவாகச் சாப்பிட உகந்தது. 140 கிராம் பப்பாளியில் 60 கலோரி, 0.4 கிராம் கொழுப்பு, 15.7 கிராம் கார்போஹைடிரேடு மற்றும் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. பப்பாளியில் கொலஸ்ட்ராலே கிடையாது. ஆகவே, எடையைக் குறைக்க விரும்புவோருக்குப் பப்பாளி ஏற்ற பழமாகும்.

You'r reading அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பப்பாளி சாப்பிடுங்கள்! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை