தற்போது கொரோனா காலம் என்பதால் ஆட்கள் கூடும் போராட்டங்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மத்திய பாஜக அரசை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர். இக்கட்சியைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகள் மற்றும் நிறுவனங்கள் முன் குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை அரை மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்களது கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இதேபோல கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஒரே சமயத்தில் கலந்து வீடுகளில் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டனர்.
தற்போது கொரோனா காலத்தில் அனைவரும் பெரும் சிரமத்தில் உள்ள போதிலும் பாஜக மக்கள் விரோதப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக இந்த போராட்டத்திற்குத் தலைமை வகித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். கொரோனாவால் அவதிப்பட்டு வரும் வருமான வரி கட்டாத மக்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும், அனைவருக்கும் 10 கிலோ ரேஷன் பொருளை இலவசமாக வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்படக் கோரிக்கைகளையும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.