குளூட்டன் இல்லாத கம்பு: சிறுதானியங்களில் சிறந்தது

Gluten-free rye: Best in whole grains

by SAM ASIR, Aug 27, 2020, 17:54 PM IST

பல காலம் நம் முன்னோர் சாப்பிட்ட தானியங்களை நாம் இப்போது புறக்கணித்து விட்டோம். அவற்றைச் சாப்பிட்டதினால் நம் முன்னோர் ஆரோக்கியத்துடன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர். அப்படி நாம் மறந்துவிட்டவற்றுள் முக்கியமானது கம்பு. புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் 'பி' ஆகிய சத்துகள் இதில் அதிக அளவில் உள்ளன. மேலும் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் சத்துகளையும் அதிக அளவில் கொண்டுள்ளது. குரோமியம் சத்தை கொண்டுள்ள ஒரே சிறுதானியம் கம்பு ஆகும்.

இரும்புச் சத்து

சிறுதானியங்களில் முதன்மையானது கம்பு. கம்பரிசி, வெள்ளையரிசியை ஒத்துப்பார்த்தால் எட்டு மடங்கு இரும்பு சத்து இருக்கிறது. இரத்த சோகை குறைபாடு இருக்கும் குடும்பங்களில் வாரத்திற்கு இரண்டு நாள்கள் கம்பங்கூழ், கம்பு சோறு சாப்பிட வேண்டும். தயிர் விட்டு, சிறிய வெங்காயம் சேர்த்து முருங்கைக்கீரை வைத்துச் சாப்பிடலாம்.

ஸிங்க்

பார்லிக்கு அடுத்தபடியாக அதிக அளவு மெக்னீசியம், துத்தநாகம் (ஸிங்க்) கொண்ட தானியம் கம்பு.

புரதம்

கம்புவில் 14 சதவீதம் புரதம் காணப்படுகிறது. இதில் லைசின் என்னும் அமினோஅமிலம் இல்லை. ஆகவே இதில் உள்ள புரதம் முழுமையானதல்ல. லைசின் அதிகமாக உள்ள பீன்ஸ், பாலாடைக்கட்டி மற்றும் முட்டையுடன் சாப்பிட்டால் முழு புரதம் கிடைக்கும்.
ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுஉடலின் செல்களில் ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் நிலையற்ற மூலக்கூறுகளே பல குறைபாடுகளை உருவாக்குகின்றன. கம்புவில் அநேக ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் உள்ளன. அவை ஃப்ரீ ராடிகல்ஸுக்கு எதிராகச் செயல்படுகின்றன. ஆகவே, புற்றுநோய், முடக்குவாதம், இருதய நோய், நீரிழிவு, அல்சைமர் ஆகியவற்றைத் தடுக்கும் உணவாகக் கம்பு உள்ளது.

பித்தப்பை கல்

பித்தப்பையில் கல் உருவாகி பலர் அவதிப்படுகின்றனர். அறுவை சிகிச்சை செய்தே அகற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. கம்பு, பித்தநீர் சுரப்பைக் குறைத்து பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கிறது.

தாய்மை

கம்புவில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஆகவே, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது. பாலூட்டும் தாய்மாருக்கு உகந்தது. பாலில் உள்ளது போல் மூன்று மடங்கு சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) உள்ளது. கம்பு தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.

குழந்தை உணவு

ஆறுமாதத்திலிருந்து குழந்தைக்குக் கம்பு கொடுக்கலாம். எளிதில் செரிக்கக்கூடியது. பொடியாக்கி கஞ்சி செய்து கொடுக்கவேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு அசதியையும் மனவளர்ச்சியில் தடையையும் கொண்டு வருகிறது. இதைத் தவிர்க்கப் பிள்ளைகளுக்குக் கம்பை பயன்படுத்தி சிற்றுண்டிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

குளூட்டனுக்கு நோ

குளூட்டன் என்பது ஒரு வகை புரதம். கோதுமையில் உள்ளது. இது வயிற்று உப்பிசம், பொருமல் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சனைக்குக் காரணமாகிறது. கம்புவில் குளூட்டன் இல்லை. ஆகவே, இது கோதுமையைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவாகும்.

நன்மைகள்

கம்புவில் அதிக நார்ச்சத்து உள்ளது. ஆகவே நீரிழிவைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்குப் பயன்படுகிறது. குடல்புண் மற்றும் வாய்ப்புண்களைக் குணமாக்குகிறது.

கம்பு உணவுகள்
கம்பங்கூழ் வெயிலுக்கு இதமாகவும் செரிமான சக்தியையும் கொண்டுள்ளது.

கம்பு கிச்சடி

தேவையானவை: கம்பு - 100 கிராம்; பீன்ஸ் - 50 கிராம்; சீரகம் - 1 தேக்கரண்டி; மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி; கடுகு - கால் தேக்கரண்டி; உப்பு (தேவையான அளவு); சிவப்பு மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி; வேர்க்கடலை - அரை கிண்ணம்; இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி; வெங்காயம் (நறுக்கியது) - 1; நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை: சமைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கம்பை ஊற வைக்கவும். நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, வெங்காயம், வேர்க்கடலை, இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும். மசாலா பொருள்களைக் கலந்து கிண்டவும். ஊற வைத்த கம்பு மற்றும் பீன்ஸை தேவையான தண்ணீருடன் சேர்த்து பதினைந்து நிமிடம் அடுப்பில் வைக்கவும். கம்பு கிச்சடி தயார்.

தூக்கமின்மை பெரிய குறைபாடாக வளர்ந்துள்ள காலம் இது. கம்பு தூக்கமின்மையைத் தவிர்க்கிறது. கம்பு சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

You'r reading குளூட்டன் இல்லாத கம்பு: சிறுதானியங்களில் சிறந்தது Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை