வேலை, டென்ஷன், மன அழுத்தம் என இரவு முழுவதையும் புரண்டு படுத்தேத் தீர்த்திருப்போம். ஆனால் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ உணவு எந்தளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் அவசியம்.
இன்றைய ஸ்மார்ட் உலகில் மூன்றில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருகின்றன. மனதில் டென்ஷனும், கோபமும், நாளைய கவலையும் இல்லாமல் இருந்தாலே நல்ல தூக்கம் வரும்.
நல்ல தூக்கம் இருந்தால்தான் அன்றைய நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கும். ஆக, நல்ல தூக்கம் மட்டுமே நமது லட்சியத்தை உடலளிவிலும், மனதளவிலும் சென்றடைய வழி செய்யும்.
நாம் எவ்வளவு ரிலாக்ஸ்டு ஆக இருந்தாலும் ஸ்மார்ட்போன் கையில் இருக்கும் வரை வேலை ஆகப்போவதில்லை. அதனால், முதலில் உங்கள் ஃபாலோயர்களை மறந்துவிட்டு சில மூச்சுப் பயிற்சிகள் செய்து பாருங்கள், தானா சேரும் கூட்டமாக தூக்கம் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் கூடவே அழைத்துவரும்.
- முதலில் ஒரு நேரான நாற்காலியில் முதுகு நேராக இருக்கும்படி சாய்ந்து அமருங்கள்.
- உங்கள் நாக்கை மேல்தாடைப் பல் வரிசைக்குப் பின்பகுதியில் உள்ள ஈறுகளின் மீது அழுந்தும்படி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு 4 விநாடிகள் நன்றாக மூச்சை உள் இழுக்கவும்.
- பின்னர் ஒரு 7 விநாடிகள் உள்ளிழுத்த மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்
- இறுதியாக வாய் வழியாக இழுத்துப்பிடித்த மூச்சை மெதுவாக எட்டு விநாடிகளுக்கு வெளிவிடுங்கள்.
இதன்பின்னர் வாயை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு மேற்சொன்னவாறே ஒரு நான்கு முறை செய்யவேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை அல்லது அதற்கு மேலேயும் செய்யலாம். இரண்டு முறைக்கு மேல் செய்யும்போது லேசாக தலைசுற்றுவதுபோல் உணர்ந்தால் பயிற்சியை நிறுத்திவிடலாம்.