ஈறுகளில் இரத்தக் கசிவு, உடல் அசதி, எளிதில் காயம் ஏற்படுகிறதா? இவற்றை சாப்பிடலாம்!

Bleeding gums, body aches, easily injured Lets eat these

by SAM ASIR, Oct 6, 2020, 19:19 PM IST

நமக்கு எதிர்பாராமல் திடீரென காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் இரத்தம் தானாக உறைய முயற்சிக்கும். அதற்குக் காரணம் இரத்தத் தட்டுகள் என்னும் இரத்த வட்டணுக்கள் ஆகும். இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு இவற்றுடன் இரத்தத் தட்டுகளும் உள்ளன. இரத்தத் தட்டுகள், திராம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லையென்றால் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறி ஆபத்தை விளைவிக்கும்.

அறிகுறிகள்

இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் அறிகுறிகளாக அசதி, ஈறுகளில் இரத்தக் கசிவு, எளிதில் சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்படுதல் ஆகியவை கூறப்படுகின்றன. மூக்கில் இரத்த ஒழுக்கு, சிறுநீரில் இரத்தம், அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு, காயங்களில் நீடித்த இரத்தக் கசிவு, மலத்தில் இரத்தம் போன்றவையும் இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.தீவிர பாதிப்பு எனில் இரத்தமாக வாந்தியெடுத்தல், மூளையில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படும்.இரத்தத் தட்டுகள் குறைவாக இருக்கும் நிலை திராம்போசைடோபீனியா என்று கூறப்படுகிறது. இது ஆரம்ப நிலையில் இருந்தால் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

தேவையான சத்துகள்

இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதற்கு வைட்டமின் பி-12, ஃபோலேட் (வைட்டமின் பி-9), வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அவசியம்.

இரத்தத் தட்டுகளில் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய உணவுகள்

வைட்டமின் ஏ: உடலில் புரதம் உற்பத்தியாவதற்கு முக்கியமான காரணியான வைட்டமின் ஏ, இரத்தத் தட்டுகளின் உற்பத்திக்கும் அவசியம். ஆரோக்கியமான புரதம், செல் பிரிதலுக்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும். காரட், பூசணி, பரட்டைக் கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடலாம்.

வைட்டமின் பி9: ஃபோலேட் என்னும் வைட்டமின் பி9 சத்து குறைவாக இருந்தாலும் இரத்தத்தில் வட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் ஆரஞ்சு ஜூஸ், பசலைக்கீரை உள்ளிட்ட கீரைகளை சாப்பிடுவது ஃபோலேட் சத்து கிடைக்க வழி செய்யும்.

வைட்டமின் கே: உடலிலுள்ள செல்கள் ஆரோக்கியமாக வளர்ச்சியடைவதற்கு வைட்டமின் கே அவசியம். முட்டை, காய்கறிகள், ஈரல், இறைச்சி, கோஸ் போன்றவை வைட்டமின் கே நிறைந்த உணவுகளாகும்.

வைட்டமின் பி12: இரத்த செல்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இன்னொரு சத்து வைட்டமின் பி12 ஆகும். பொதுவாக முட்டை, பால், பாலடைக் கட்டி ஆகியவற்றில் வைட்டமின் பி12 அதிகம் காணப்படுகிறது.

இரும்புச் சத்து: இரத்த சோகையை போக்குவதற்கு இரும்புச் சத்து அவசியம். பூசணி விதைகள், மாதுளை, கீரைகள் ஆகியவை இரும்புச் சத்து நிறைந்த உணவுகளாகும்.

வைட்டமின் சி: இரத்த வட்டணுக்கள் இணைந்து சரியாக செயல்படுவதற்கு தேவையான சத்து வைட்டமின் சி ஆகும். உடல், உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சி இரத்த வட்டணுக்களை பெருக்குவதற்கு வைட்டமின் சி உதவுகிறது. மாம்பழம், பிரெக்கோலி, அன்னாசி, தக்காளி, காலிஃபிளவர் மற்றும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது.இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது நிற்கும். உடல் அசதி ஏற்படாது. எதிர்பாராத காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் தானாக உறைந்து ஆபத்தை தடுக்கும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை