பனை மரம் 'கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருள்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியன; பொருளாதார ரீதியாகப் பயன் தரக்கூடியன. பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் நமக்குப் பயன்படக்கூடியவை.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழத்தின் விதைகளைக் குழியில் போட்டு புதைக்கிறார்கள். சில வாரங்களில் விதைகளின் வேர்ப்பகுதியில் மாவுப் பொருள் சேகரிக்கப்பட்டு கிழங்காக மாறுகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது.நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும்.
பனங்கிழங்கு குடல் புண் மற்றும் வயிற்றுப்பூச்சியை நீக்குகிறது. மலச்சிக்கலை நீக்குவதோடு, உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்து வெளியேற்றுகிறது. மஞ்சள் பனங்கிழங்கிற்குச் சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும்.இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதைத் தவிர்க்கப் பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால்
உடலால் செரிக்க இயலாத மற்றும் உறிஞ்ச இயலாத நார்போன்ற கார்போஹைடிரேட் இதில் உள்ளதாக இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. பனங்கிழங்கைச் சாப்பிட்டால் அதிகம் பசியெடுக்காது. ஆகவே, குளூக்கோஸின் அளவும் மட்டுப்படுகிறது. பனங்கிழங்கிலுள்ளது போன்ற நார்ச்சத்தை உணவில் சேர்த்தால் இதய நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தவிர்க்க இயலும்.
இரும்புச் சத்து
இரத்த நிறமியான ஹீமோகுளோபின் முறையாகச் செயல்படத் தேவையான இரும்புச் சத்து பனங்கிழங்கில் உள்ளது. இதன் காரணமாக இரத்தம் நல்ல முறையில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும். இரும்புச் சத்து, பெண்கள் ஆரோக்கியமான முறையில் கர்ப்பந்தரிக்க உதவுகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கிக் காயவைத்து அதனுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.
சுண்ணாம்புச் சத்து
எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கத் தேவையான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) பனங்கிழங்கில் உள்ளது. முதுமையின் காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல பிரச்னைகளை இது தவிர்க்கிறது.
மெக்னீசியம்
இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய மெக்னீசியம் பனங்கிழங்கில் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் சீராக கட்டுப்படுத்துகிறது.,
பனங்கிழங்கு அல்வா
பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின்னர் உலர வைக்க வேண்டும். நன்கு உலர்ந்தபின் அதை மாவாக்கி, அதனுடன் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப் பாகு கலந்தால் சுவையான பனங்கிழங்கு அல்வா தயார்.