கோவிட்-19 நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு பிறகு செய்யக்கூடிய தவறுகள்?

by SAM ASIR, Nov 2, 2020, 21:04 PM IST

கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது கிருமி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அதற்கான பரிசோதனை செய்து அதில் 'நெகட்டிவ்' அதாவது கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்துவிட்டால் மனதில் பெரிய நிம்மதி ஏற்படுவது இயற்கை. ஆனால், ஒரே ஒரு நெகட்டிவ் முடிவு நம்மைப் பாதுகாப்பாக உணரச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததா என்பது கேள்விக்குரியதுதான்!

சில பயணங்களுக்கு, அலுவலகங்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற தேவைகளுக்குப் பரிசோதனை செய்பவர்கள், தங்களுக்கு நெகட்டிவ் என்ற முடிவு வந்துவிட்டால் சுதந்திர மனப்பான்மைக்கு வந்து விடுகின்றனர். உண்மையில் நெகட்டிவ் முடிவு அவ்வளவு விடுதலையுணர்வை தரக்கூடியதுதானா என்பதும் கேள்விக்குறிதான்!

'நெகட்டிவ்' சந்தோஷம் அளிக்கக்கூடியதா?

ஒரே ஒரு பரிசோதனை முடிவு மற்றவர்களுடன் தயக்கமின்றி பழகலாம் என்ற உத்திரவாதத்தை அளிக்கக்கூடியது அல்ல. ஒரு பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' என்று வருவதால் பாதுகாப்பாகக் கருதுவது மிகப்பெரிய தவறாகக்கூடும். நெகட்டிவ் என்று முடிவு வந்துவிட்டதாலே உங்களால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்பது உறுதி அல்ல.

எல்லா கோவிட்-19 பரிசோதனை முடிவுகளும் துல்லியமானவையாக இருக்க முடியாது என்று கருதப்படுகிறது. பெரும்பாலான பரிசோதனை முடிவுகள் சரியானவையாக இருந்தாலும், பல காரணிகளைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன. ஆர்டி-பிசிஆர் என்ற பரிசோதனை மிகச் சிறிய அளவிலான வைரஸையும் கண்டுபிடிக்கக்கூடிய தரம் வாய்ந்தது. அப்பரிசோதனைக்கான கட்டணம் அதிகம். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் முடிவு வருவதற்கு 24 முதல் 42 மணி நேரம் ஆகக்கூடும்.

பலர் எளிதாக எடுக்கக்கூடிய, கட்டணம் குறைவான ஆன்டிஜன் சோதனையைச் செய்கின்றனர். இதில் 'பாசிட்டிவ்' அல்லது 'நெகட்டிவ்' என்ற முடிவுகள் தவறாக வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எந்த பரிசோதனையுமே தவறான முடிவுகள் அடிப்படையில் மனச் சஞ்சலத்தையோ அல்லது சந்தோஷத்தையோ அளிக்கக்கூடியவையாகவே உள்ளன.

மாதிரி சேகரிக்கும் நேரம்

பரிசோதனையின் துல்லியம் நேரத்தைப் பொறுத்ததாகவும் அமைகிறது. வைரஸ் அடைகாக்கும் நேரம் 5 முதல் 12 நாள்கள் என்று கூறப்படுகிறது. சில சமயம் கூடுதலாகவும் இருக்கும். ஆகவே, கிருமித் தொற்று உள்ளவரிடம் பழக நேரிட்டால் அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

கிருமித் தொற்று ஏற்பட்டு 4 முதல் 5 நாள்கள் என்ற ஆரம்பக் கட்டத்தில் எடுக்கப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தவறான முடிவுகள் வரக்கூடிய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டிஜன் சோதனையில் இதன் வாய்ப்பு இன்னும் அதிகமாகும். ஆகவேதான் ஆன்டிஜன் சோதனையில் கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்தவர்கள் சிலரை அறிகுறிகளின் அடிப்படையில் ஆர்டி-பிசிஆர் என்ற சோதனையைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

மற்றவர்களைச் சந்தித்தல்

கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், முகக்கவசம் அணிவதும், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதும் மட்டுமே. ஆகவே, நெகட்டிவ் ரிசல்ட் வந்ததும் சமுதாயத்தில் அனைவரையும் நெருங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். யாரையாவது சந்தித்து ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் உரிய இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சந்திக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் கண்டிப்பாக வீட்டினுள் தனிமையாக இருக்கவேண்டும். நோய்த் தொற்று குறைந்தோர் மற்றும் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளோர் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

You'r reading கோவிட்-19 நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு பிறகு செய்யக்கூடிய தவறுகள்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை