மூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்?

by SAM ASIR, Nov 28, 2020, 20:56 PM IST

இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் அதைச் சீராகப் பராமரிக்க முடியும். பொதுவாக உப்பு, கொழுப்பு மற்றும் கலோரி (எரிசக்தி) குறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும்; காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த புரத (lean protein) உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

காஃபைன் அடங்கிய பானங்கள், மது ஆகியவையும் இரத்த அழுத்தம் உயர்வதற்குக் காரணமாகிறது என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். சில பானங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்துவதுபோல, இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய பானங்களும் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து அருந்தினால், இரத்த அழுத்தம் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.

புதினா, கொத்தமல்லி நீர்

ஒரு கிண்ணம் நிறையப் புதினா இலைகள், ஒரு கிண்ணம் நிறையக் கொத்தமல்லி இலைகள், விதை நீக்கப்பட்ட 4 அல்லது 5 முழு நெல்லிக்காய்களை எடுத்து, ஒரு கோப்பை நீர் சேர்த்து மிக்ஸியில் (blender) சிறிது அடித்து அதைக் குடித்து வரை ரத்தக்கொதிப்பு மட்டுப்படும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்பு குறைந்த பால் அருந்துவதால் பொட்டாசியம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) உடலுக்குக் கிடைக்கும். கொழுப்பு நிறைந்த பால் அருந்தினால், பால் பொருள்களைச் சாப்பிட்டால் அதிலுள்ள பால்மிடிக் அமிலம் இரத்த நாளங்களைத் தளர்த்துவதற்கான சமிக்ஞைகளைத் தடுக்கும். அதன் காரணமாக இரத்த அழுத்தம் உயரும்.

சியா விதை நீர்

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் குறைகிறது. சியா விதைகளைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் நீரை அருந்த வேண்டும். ஒரு மாத காலத்திற்குத் தினமும் அருந்தினால் பலன் தெரியும்.

எலுமிச்சை நீர்

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அருந்துவது உடல் செல்களை சுத்தம் செய்யும் என்று ஆரோக்கிய வல்லுநர்கள் கூறுகிறார்கள். எலுமிச்சை நீரில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயலாற்றி உடலிலுள்ள நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) அகற்றுகிறது. எலுமிச்சை நீர் இரத்த நாளங்களைத் தளர்த்தி மென்மையாக்குவதால் இரத்த அழுத்தம் குறையும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. ஆகவே, உடலிலுள்ள சோடியம் மற்றும் நச்சுகளை அகற்றுகிறது. இதிலுள்ள ரென்னின் என்ற நொதி (என்சைம்) இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. காலையில் ஒரு தம்ளர் நீரில் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

வெந்தய நீர்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தால், இவற்றைத் தொடர்ந்து அருந்துவது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்