கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த கால கட்டத்தில் ஆன்லைன், அஞ்சலகம், இ தரிசன கவுண்டர்கள் மூலம் 300 ரூபாய் சிறப்புத் தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகள், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்த பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நீண்ட நாள்களுக்கு பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்துக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவிலின் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ``நவம்பர் 28 வரை கோவிலின் நிகர சொத்து 7754 ஏக்கர் உள்ளது. மேலும், விவசாய நிலங்கள் 1792 ஏக்கரும், விவசாயமில்லாத நிலங்கள் 5961 ஏக்கரும் இருக்கிறது. 1974 முதல் 2014 வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விறக்கப்பட்டு 6.13 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளது" என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது