பொதுவாகச் செரிமானம் தொடர்பான உபாதைகளை நாம் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அவ்வப்போது தலைகாட்டினாலும் அவை தொடர்ந்து தொல்லை தரவில்லையென்றால் அவற்றைக் கவனிக்கமாட்டோம். ஆனால், வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதன் காரணமாகவே பல செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. நெஞ்சு, தொண்டை மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வு எப்போதாவது தென்பட்டாலும் செரிமான மண்டலத்தில் சிக்கல் உள்ளது என்று அறிந்து அதைக் குணப்படுத்தவேண்டும். சிறுசிறு தொல்லைகளைக் கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் அது பெரிய அளவில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும்.
அடிவயிற்றில் அசௌகரியமான உணர்வு, குறிப்பாக வெறும் வயிற்றில் தொல்லை, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்று உப்பிசம் (வயிறு உப்பியதுபோன்ற உணர்வு), மலம் வழக்கத்திற்கு மாறாக இளக்கமாகக் கழிதல் அல்லது மலச்சிக்கல், பசியின்மை ஆகியவையும் வயிற்றுக் கோளாறுக்கான அறிகுறிகளாகும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு வயிற்று பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்க முடியும்.
ஓமம்
வயிற்றின் வாய்வு தொல்லைகளை போக்கக்கூடிய இயல்பு ஓமவிதைகளுக்கு உள்ளது. இது செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடியது. ஓமத்தில் காணப்படும் தைமோல் என்னும் உயிரி வேதிப்பொருள் ஜீரணத்தைத் தூண்டுகிறது. சிறிதளவு ஓமவிதைகளை எடுத்து ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக்கோளாறு தீரும். ஒரு தேக்கரண்டி அளவு ஓமவிதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட்டு காலை அந்த நீரைப் பருகுவதும் பலன் தரும்.
பெருஞ்சீரகம்
சாப்பிட்டு முடித்ததும் கொஞ்சம் பெருஞ்சீரகத்தை வாயில் போடுவது நம் பாரம்பரியம். பெரும்பாலும் வாயில் துர்நாற்றம் எழாதிருக்க அப்படிச் செய்கிறோம் என்று நினைக்கக்கூடும். ஆனால், பெருஞ்சீரகத்திற்கு உணவைச் செரிக்க வைக்கும் சக்தி உள்ளது. பெருஞ்சீரகத்துடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். பெருஞ்சீரகத்தை அப்படியே வாயினுள் போடலாம் அல்லது இரவு நீரில் ஊற வைத்து காலையில் அந்நீரை வெதுவெதுப்பான சூடாக்கி அருந்தலாம். டீ உடன் பெருஞ்சீரகம் சேர்த்துப் பருகலாம்.
பால் மற்றும் யோகர்ட்
அமிலத்தன்மைக்குச் சரியான மாற்றுப் பால் ஆகும். குளிர்ந்த அல்லது சாதாரண சூட்டில் உள்ள பால் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. பாலை அருந்துவதுடன், சிறிது சிறிதாக உறிஞ்சுதல் நல்ல பலன் தரும். பாலில் உள்ள கால்சியம், அமிலத்தைச் சமநிலையாக்குகிறது. யோகர்ட்டும் இதேபோன்று அமிலத்தன்மையைக் குறைக்கும் தன்மை கொண்டது.
தேன்
ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பருகினால் வயிற்று அமிலத்தன்மை குறையும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
கொத்துமல்லி
கொத்துமல்லி தழை மற்றும் விதை இரண்டுக்கும் வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைக்கும் இயல்பு உள்ளது. பச்சை கொத்துமல்லி தழையின் சாறு 10 மில்லி லிட்டர் எடுத்து தண்ணீர் அல்லது மோருடன் கலந்து அருந்தலாம். கொத்துமல்லி விதைகளை உலரவைத்து பொடியாக்கிச் சமையலின்போது பயன்படுத்தலாம். கொத்துமல்லி பொடியில் டீ தயாரித்து அருந்தினால் வயிற்று உப்பிசம் குணமாகும். குமட்டல், வாந்தி ஆகியவற்றையும் இது போக்கும்.
பழங்கள்
சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை இவை உள்பட அனைத்து பழங்களும் வயிற்றுக்கு நல்லது. இவை அமிலத்தன்மையைப் போக்கும். தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது வயிற்றை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்ள உதவும். இரண்டு உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் பழம் சாப்பிடுவது செரிமான கோளாறுகள் வராமல் தடுக்கும்.