நடிகரிடம் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கற்க விரும்பும் பிரபல நடிகை..

by Chandru, Dec 25, 2020, 13:16 PM IST

அம்புலி, ஆஹா, ஜம்பு லிங்கம் 3டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கோகுல்நாத், இவர் குட்டா என்ற நடனப் பள்ளி நடத்துகிறார். நடனம் மட்டுமல்லாமல். ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம், இடுப்பில் வளையம், கால்களில் சுழற்றுதல் போன்ற பல கலைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார். சமீபத்தில் கோகுல்நாத் மற்றும் அவரது மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 14 பேர் ஜிம்னாஸ்டிக் செய்தபடி இடுப்பு, கால் மற்றும் தலைகீழாக நின்றபடி பாதம் ஆகியவற்றில் வளையம் சுழற்றுதல் போன்ற கலைகளில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கின்றனர்.

இதில் கோகுல்நாத் நோஸ் ஹூப்பிங் உள்ளிட்ட 4 கலைகளில் சாதனை நிகழ்த்தி 4 கின்னஸ் சான்றிதழ் பெற்றிருக்கிறார். மேலும் மாணவர்கள் சாஜன், எஸ்.டி.திவாகர், பயிற்சியாளர் கே.நாகராஜ், மாணவிகள் ஆண்ட்ரியா வர்கிஸ், எஸ். ரியானா ஆண்ட்ரியா, ஏ.எஸ்.ஐஸ்வர்யா, வைணவி சரவணன், எம்.சக்தி பூரணி, கரிமா பன்சாரி, எம்.வி.திவினா ஸ்மிரிதி, வி.மோனிஷா, ஜே.ஜெஸ்ஸிகா. லக்‌ஷிதா ராஜேஷ் ஆகியோர் கின்னஸ் சான்றிதழ்கள் பெற்றனர். அவர்களுக்கு நடத்தப் பாராட்டு விழாவில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டனர்.

இதில் ஐஸ்வர்யா பேசியதாவது:கோகுல்நாத்தை மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்தே எனக்குத் தெரியும். அப்போதே அவர் எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்வார். அடிக்கடி அவர் வீடியோக்கள் பதிவிடுவார். அதுவும் வித்தியாசமானதாக இருக்கும் இன்றைக்கு அவர் மட்டுமல்ல அவரது மாணவ, மாணவிகளும் கின்னஸ் சாதனை செய்திருக்கின்றனர். இங்கு சிலம்பம் சுழற்றியதையும், ஜிம்னாஸ்டிக் செய்ததையும் பார்த்தபோது எனக்கு அந்த ஆசை வந்துவிட்டது. சிலம்பம் சுழற்றவும் ஜிம்னாஸ்டிக் கற்கவும் முடிவு செய்துள்ளேன். பெண்கள் உறுதியாக இருப்பதைக் கண்டால் எனக்குப் பிடிக்கும். நான் சிறுவயதில் நீச்சல் பயிற்சி நிறையச் செய்வேன். ஜிம்மானிஸ்டிக்கை இங்குள்ளவர்கள் 2 வருடமாக செய்கிறார்கள் என்றார்கள், என்னால் அவ்வளவு நாள் கற்க முடியாது 2 மாதத்தில் கோகுலிடம் கற்க விரும்புகிறேன் என்றார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது:அந்த காலத்தில் என் அப்பா இதுபோன்ற விளையாட்டு எனக்குச் சொல்லித்தரவில்லை இன்றைக்குப் பெற்றோர்கள் பிள்ளைகளை ஜிம்னாஸ்டிக் போன்றவற்றைக் கற்க அனுப்புவது பாராட்டுக்குரியது. முன்பெல்லாம் கின்னஸ் சாதனை செய்தவர்கள் பற்றிக் கேள்விப்படுவோம் அல்லது பத்திரிகையில் படிப்போம் ஆனால் இப்போது நம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கின்னஸ் சாதனை செய்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இத்தகைய பயிற்சிகளை அளித்த கோகுல் நாத்தும் கின்னஸ் சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பூமிகா, திட்டம் இரண்டு, துக் ஜகதிஸ் (தெலுங்கு). துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடிக்கிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் படங்கள் இயக்குவதைக் குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்துகிறார். இவன்தான் உத்தமன், மாளிகை, கோப்ரா ஆகிய படங்களில் நடிக்கிறார்.

You'r reading நடிகரிடம் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கற்க விரும்பும் பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை