வயிற்றில் எரிச்சலா? புளித்த ஏப்பமா? இவற்றை செய்தால் குணம் நிச்சயம்!

by SAM ASIR, Feb 9, 2021, 21:15 PM IST

'அசிடிட்டி' என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படக்கூடும். அது பொதுவாக காணப்படக்கூடிய செரிமானம் தொடர்பான தொல்லையாகும். வயிறு மற்றும் நெஞ்சுக்குள் எரிவது போன்ற உணர்வு, ஏப்பம், சிலருக்கு குரலில் மாற்றம், வாய் துர்நாற்றம், வயிற்றில் வலி இதுபோன்ற பல தொல்லைகளுக்குக் காரணம் 'அசிடிட்டி' ஆகும். மிக அதிகமாக சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல், உணவுவேளையை தவறவிடுதல் போன்றவை இந்த பிரச்னை ஏற்படுவதற்கான சில காரணங்களாகும்.

உடல் செயல்பாடு, உறங்கும் நேரம், மன அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் கூட இந்தத் தொல்லையை கொண்டு வரக்கூடும். நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு வயிற்றுக்குள் உள்ள அமிலம் உதவுகிறது. இதன் pH மதிப்பு 1 முதல் 3 வரையில் இருக்கும். செரிமானத்திற்கான நொதிகளை (என்சைம்) தூண்டி அவற்றுடன் இணைந்து சாப்பிடும் உணவிலுள்ள புரதத்தின் அமினோ அமிலங்களின் பிணைப்பை உடைத்து செரிமானம் நடைபெற வைப்பதே இதன் வேலையாகும். வயிற்றில் எரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட இதில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகின்றன.

மன அழுத்தம்
மன அழுத்தம் நாம் நினைப்பதைக் காட்டிலும் தீமை செய்யக்கூடியது. மன அழுத்தத்தை சரியாக கவனித்து கையாளாவிட்டால் பல்வேறு உடல் நல கோளாறுகளை கொண்டு வரும். மன அழுத்தத்தால் பாதிப்புற்றவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார். தேவைக்கு அதிகமான கலோரிகள் உடலினுள் செல்லும்போது, உடலின் எடை அதிகரிக்கும். பல்வேறு ஆய்வுகள் மன அழுத்தத்திற்கும் அசிடிட்டிக்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபித்துள்ளன. ஆகவே, மன அழுத்தத்தை தவிர்த்தால் இந்த பிரச்னை இல்லாமல் போகும்.

உணவுவேளை தவறுதல்
பலர் வேலை மும்முரத்தில் சரியான நேரத்தில் சாப்பிட மறந்து போவர். சாப்பாட்டை தவிர்ப்பது அசிடிட்டி தொல்லையை வரவேற்கும் செயலாகும். அதிக நேரம் பசியாயிருந்தால், காஸ்டிரிக் ஜூஸ் எனப்படும் வயிற்று அமிலம், வயிற்றின் உட்புற சுவரை அரிக்கும். வெகுநேரம் பசியால் தவித்து, ஒரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவதும் அசிடிட்டியை கொண்டு வரும்.

அளவுக்கதிகமான உணவு
தொண்டை வரைக்கும் சாப்பிடுதல் என்பர். அதுபோன்று வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு அதிக கலோரிகளை சேர்ப்பது அசிடிட்டிக்கு வழிவகுக்கும். வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று குறைவாக சாப்பிட்டு பழகுங்கள். அது, சாப்பிட்டு முடித்தபின் சற்று லகுவாக உணர வைக்கும்.

இரவு உணவின் நேரம்
இரவு உணவு உண்பதற்கும், தூங்கச் செல்வதற்கும் இடையே அதிகமான நேர இடைவெளி வேண்டும். பலர், பரபரப்பாக வேலை செய்துவிட்டு, இரவில் சாப்பிட்டுவிட்டு அப்படியே சரிந்து படுத்துக்கொள்வர். இரவு சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரம் கழித்து படுக்கச் செல்வது கூட போதாது. சாப்பிட்டு முடித்தவுடன் படுத்தால், வயிற்றிலுள்ள அமிலம் உணவு குழல் வழியாக மேலே வரும். இதை எதுக்களித்தல் என்பர். தொண்டை வரைக்கும் புளிப்பாக இது பரவும். ஆகவே இரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து உறங்க செல்வது நல்லது.

உறக்கம்
இரவு ஆழ்ந்து நிம்மதியாக உறங்குவது அசிடிட்டி தொல்லையை கட்டுக்குள் கொண்டு வரும். அசதி, மன அழுத்தம் இவையே அசிடிட்டி பிரச்னையை தூண்டக்கூடியவை. உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்கும்போது, அசிடிட்டி தொல்லை எழும்பாது.

You'r reading வயிற்றில் எரிச்சலா? புளித்த ஏப்பமா? இவற்றை செய்தால் குணம் நிச்சயம்! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை