பல உணவுப்பொருள்களை நாம் அவற்றிலுள்ள சத்துகள் என்னவென்று தெரியாமலே சாப்பிட்டு வரக்கூடும். அப்படிப்பட்டதில் ஒன்று முள்ளங்கி. முள்ளங்கி பல வழிகளில் நாம் சமையலில் சேர்க்கின்ற காய்கறி. ஆனால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.100 கிராம் முள்ளங்கியில் 20 கிராம் கலோரி, 6.7 கிராம் கார்போஹைடிரேடு, 0.8 கிராம் புரதம் (புரோட்டீன்), 2.6 கிராம் நார்ச்சத்து, 19.9 மில்லி கிராம் வைட்டமின் சி, 2.6 மில்லி கிராம் பயோட்டின், 27.9 மைக்ரோ கிராம் ஃபோலேட், 30.2 மில்லி கிராம் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), 0.3 மில்லி கிராம் இரும்புச் சத்து, 93.5 கிராம் நீர் ஆகியவை உள்ளன.
100 முள்ளங்கி இலையில் 20 கிராம் கலோரி, 2.7 கிராம் கார்போஹைடிரேடு, 2.2 கிராம் புரதம் (புரோட்டீன்), 4.39 மைக்ரோகிராம் பயோட்டின், 53.1 மைக்ரோகிராம் ஃபோலேட், 67.5 மில்லி கிராம் வைட்டமின் சி, 234 மில்லி கிராம் கால்சியம் (சுண்ணாம்பு சத்து), 3.8 மில்லி கிராம் இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
சருமத்திற்குப் புத்துணர்வு
முள்ளங்கியில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால், அது தோலின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. தோலின் மீள் தன்மையை (எலாஸ்டிசிட்டி) அதிகரிக்கிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் சருமத்தை நீர்ச்சத்து நிறைந்ததாக வைப்பதற்கு முள்ளங்கியிலுள்ள நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் உதவுகின்றன. முள்ளங்கியிலுள்ள ஃபோலேட், முதுமை தோற்றத்தைத் தள்ளிப்போட உதவுகிறது.
செரிமானம்
முள்ளங்கியில் அதிக அளவு நார்ச்சத்தும், ஃபோலேட், கால்சியம், இரும்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன. ஒரு தனி நபருக்கு ஒரு நாளுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவை. முள்ளங்கியில் அது தாராளமாக உள்ளது. முள்ளங்கி, நெஞ்சுக்குள் எரிச்சல், மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம் போன்ற உடல் நலக் கோளாறுகளைக் குணப்படுத்துவதோடு வயிற்றிலுள்ள திசுக்களைப் பாதுகாத்து குடற்புண் (அல்சர்) வராமல் தடுக்கிறது.
பெண்ணுறுப்பு
முள்ளங்கி இயற்கையான முறையில் பூஞ்சைகளுக்கு (antifungal) எதிராகச் செயல்படக்கூடியது. முள்ளங்கியில் RsAFP2 என்ற புரதம் உள்ளது. இது பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படும். மனிதர்களில் காணப்படக்கூடிய கண்டிடா அல்பிகான்ஸ் என்ற பூஞ்சையை இது அழிக்கும். கண்டிடா அல்பிகான்ஸ் வளர்ந்தால், பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டு அழற்சி, தீவிர அரிப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முள்ளங்கி இவற்றைத் தடுப்பதோடு, வாய் தொற்று, இரத்தம், இருதயம், மூளை, எலும்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளைத் தாக்கக்கூடிய இன்வாசிஸ் கண்டிடியாசிஸ் என்ற தொற்றினையும் தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்
முள்ளங்கியில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டு, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிகம் உள்ளன. இந்தச் சத்துகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் இதய நோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கின்றன. இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கக்கூடிய இயற்கை நைட்ரேட்டுகள் இதில் உள்ளன.