தேர்தல் வரவுள்ளதையடுத்து,புதுச்சேரியில் தினமும் மது விற்பனை குறித்த விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.இது குறித்து புதுச்சேரி கலால் துணை ஆணையர் சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து மதுபான கடை உரிமதாரர்களும் கலால் விதிகளின்படி செயல்பட வேண்டும். அனைத்து சாராய ஆலைகள், மதுபான விற்பனையகங்கள் மற்றும் குடோன்களில் சிசிடிவி கேமிராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
குடோன்களில் உள்ள காமிராக்கள் அனைத்தும் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். அதுதொடர்பான முழு விவரத்தை வரும் 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.அனைத்து சாராய ஆலைகள், மதுபான உரிமம் பெற்றோர் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்கவேண்டும். இது வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 11ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது .