சாப்பிடும்போது இப்படி செய்யுங்கள்... உடல் எடை குறையும்!

by SAM ASIR, Feb 14, 2021, 16:32 PM IST

எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கிறது. ஒன்றை செய்வதன் மூலம் நன்மையோ, தீமையோ ஏற்படக்கூடும். சில நல்ல விஷயங்கள் கூட, அவை செய்யப்படும் முறையால் தீமையாக முடியக்கூடும். சாப்பிடுவது நல்ல செயல். அதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது; நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஆனால், சாப்பிடுவதற்கும் சில முறைகள் உள்ளன. சரியான முறைப்படி சாப்பிடாவிட்டால், அந்தச் சாப்பாட்டால் நன்மை அல்ல; அதிக தீமையே விளையக்கூடும். சரியாக சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

திருப்தியை உணருவோம்
வயிறு நிறைந்துவிட்டது என்பதை உடல் உணருவது நேரம் கொடுப்பதேமெதுவாக சாப்பிடுவதிலிருக்கும் முக்கியமான நன்மையாகும். வயிறு திருப்தியாகிவிட்டது என்று மூளை நமக்குச் சொல்வதற்கு, நாம் சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து 20 நிமிட நேரம் தேவை. அநேகர் சாப்பிட்டு முடிப்பதற்கு கூட அவ்வளவு நேரம் ஆகாது. மெதுவாக சாப்பிட்டால், வயிறு நிறைந்துவிட்டது என்ற உணர்வு மட்டுமல்ல; திருப்தியும் ஏற்படும்.

செரிமானம்
மெதுவாக சாப்பிடுதல் செரிமானத்திற்கு உதவும். செரிமானம், வாயிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஆகவே, சரியாக மெல்லாமல் பெரிய கவளமாக அல்லது துண்டாக விழுங்குவது வயிற்றுக்குச் சிரமத்தை கொடுக்கும். சரியாக மெல்லப்படாத உணவுபொருள்களால் செரிக்காமையும் தீவிரமான உணவுக்குழல் மற்றும் சிறுகுடல் பாதிப்புகளும் உருவாகக்கூடும்.

எடை குறைப்பு
மெதுவாக சாப்பிடுவது குறித்த பல ஆராய்ச்சிகள், இப்படி சாப்பிட்டால் குறைவாக சாப்பிட முடியும் என்று கூறுகின்றன. குறிப்பாக, உடல் எடையை குறைப்பதற்கு மற்றும் குறைவான எடையை சீராக பராமரிக்க விரும்புவோர், மெதுவாக சாப்பிடும் முறையை கடைபிடிப்பது நல்லது.

போதுமான நீர்ச்சத்து
உடலில் போதுமான அளவு நீர் இருந்தால்தான், உடலில் திரவங்களின் அளவு பராமரிக்கப்படுவதோடு, தசைகளுக்கு ஆற்றல் கிடைக்கும். சிறுநீரக செயல்பாடு, மலம் வெளியேறுதல் போன்றவை சரியாக நடக்கும். இளமையான தோற்றத்தை விரும்புவோருக்கு, சருமம் பொலிவாக தோற்றமளிக்கவும் நீர்ச்சத்து அவசியம். மெதுவாக சாப்பிடுவதன் இன்னொரு நன்மை, அப்படி சாப்பிடும்போது நாம் அருந்தும் தண்ணீரின் அளவும் அதிகரிப்பதாகும். விரைவாக சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படும். சீக்கிரமாக உணவு தீர்ந்துபோவதால் இன்னும் சாப்பிடலாம் என்ற உணர்வு தோன்றும். பரபரப்பாக சாப்பிடுவதால், திருப்தியடைவதற்குத் தேவையான அளவை கடந்தும் சாப்பிட்டுவிடக்கூடும்.

விரைவாக சாப்பிடுவதில் உள்ள பாதிப்புகள்
பரபரப்பாக, பதற்றமாக உணவை அள்ளிப் போட்டுக்கொண்டு வயிற்றை நிரப்புவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எடை குறைத்தல் மற்றும் சரியாக பராமரித்தல் ஆகிய நோக்கம் கொண்டவர்கள், கண்டிப்பாக மெதுவாகவே சாப்பிட்டாக வேண்டும். அவ்வப்போது ஏதாவது நொறுக்குத்தீனியை சாப்பிடுவதற்குக் காரணம், உணவை விரைவாக சாப்பிடுவதுதான். விரைவாக சாப்பிடுகிறவர்கள், இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற எல்லையை பெரும்பாலும் கடந்துவிடுகிறார்கள் அல்லது அப்படி எந்த எல்லையும் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பழக்கமுள்ளவர்கள், மெதுவாக சாப்பிடும் வழக்கத்தை கைக்கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலும் வேறுபாட்டை அறிந்திட முடியும்.

சரியாக சாப்பிடும் முறைகள்
கவனம் சிதறாத அமைதியான சூழலில் அமர்ந்து சாப்பிடவேண்டும். வாகனம் ஓட்டும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது, ஏதாவது சாதனங்களை பயன்படுத்திக்கொண்டு சாப்பிடக்கூடாது. உணவில் முழு கவனத்தையும் செலுத்தி சாப்பிடவேண்டும். மென்று சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுக்கக்கூடிய நார்ச்சத்து மிக்க உணவுகளை தெரிந்தெடுத்து சாப்பிடவேண்டும். காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம். வேகவேகமாக கைக்கும் வாய்க்கும் சண்டை போன்று சாப்பிடவேண்டாம். பொறுமையாக மென்று, மெதுவாக சாப்பிடவேண்டும். நண்பர்களோடு, குடும்பத்தோடு சாப்பிட்டால் நன்கு மென்கு சாப்பிட்டும், சற்று உரையாடிவிட்டு பின்னர் அடுத்த கவளத்தை மெல்ல ஆரம்பிக்கலாம்.

முடிந்த அளவுக்கு நன்கு, அதிக நேரம் உணவை மெல்லவேண்டும். தொடக்கத்தில் இது வித்தியாசமாக தெரியலாம். ஆனால், நாள்கள் கடந்ததும் பழகிவிடும்.
சாப்பிடுவதற்கு பெரிய அளவிலான தட்டுகளை அல்ல; சிறிய தட்டுகளை பயன்படுத்தவும். அப்போது குறைவான அளவு சாப்பிடுவோம். அலுவலகத்தில் வேலை செய்தால், உங்களைப்போன்று சாப்பாட்டு கொண்டு வந்து மெதுவாக சாப்பிடக்கூடியவரோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களை ஒதுக்கவும். சாப்பிடும் நேரத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தவேண்டாம். இவற்றை கடைபிடித்தால் உடல் எடை குறையும்.

You'r reading சாப்பிடும்போது இப்படி செய்யுங்கள்... உடல் எடை குறையும்! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை