பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தவிர்ப்பது எப்படி?

by SAM ASIR, Mar 25, 2021, 18:27 PM IST

நாம் யாருமே சாப்பிடுவதில் குறை வைக்கமாட்டோம். விரும்பியதை எப்படியாவது சாப்பிட்டுவிடுகிறோம். ஆனாலும் பெரும்பாலும் அநேகர் ஏதாவது ஓர் ஊட்டச்சத்து குறைவுடன் உள்ளனர். மருத்துவர்களிடம் செல்லும்போது, "சத்து குறைவு" என்பதையே நாம் கேள்விப்படுகிறோம். உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் குறைந்து காணப்படும் நிலை உள்ளது. பொதுவாக இந்திய மக்களிடம் என்னென்ன ஊட்டச்சத்துகள் குறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வு சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இரும்புச் சத்து


இந்திய மக்களிடம் குறைந்து காணப்படும் ஊட்டச்சத்துகளில் இரும்புச் சத்து முதலிடத்தில் காணப்படுகிறது. இரும்புச் சத்து குறைவுபடும்போது, இரத்தசோகை (அனீமியா) உடலை பாதிக்கிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு உடலின் அனைத்துச் செல்களுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக இருதயம் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, இதய பாதிப்பும் நேரலாம்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8.7 மில்லி கிராம் இரும்புச் சத்து தேவை. அதைக் காட்டிலும் குறைந்த வயது பெண்களுக்கு நாளொன்றுக்கு 14.6 மில்லி கிராம் இரும்புச் சத்து தேவை. மாதவிடாய் நாள்களில் வெளியேறும் இரத்தத்தால் பெரும்பாலான பெண்களுக்கு இரும்புச் சத்து குறைவு ஏற்படுகிறது. ஆகவே, அவர்கள் இரும்புச்சத்துக்கான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், தானியங்களில் இரும்புச் சத்து உள்ளது.

புரதம்


புரோட்டீன் என்று கூறப்படும் புரதம், உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகளில் ஒன்றாகும். இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது. இந்திய மக்களில் 80 சதவீதத்தினருக்கு புரத குறைபாடு உள்ளதாக தெரிகிறது. ஒரு நபர் தன் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்ற வீதத்தில் புரதத்தை உடலில் சேர்த்துக்கொள்ளும் உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூசணி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில் புரதம் உள்ளது.


ஃபோலேட்


வைட்டமின் பி 9, ஃபோலேட் என்று அழைக்கப்படுகிறது. கருவுற்ற தாய்மாருக்கு அத்தியாவசியமான தேவை ஃபோலேட் ஆகும். இது கீரை மற்றும் காய்கறிகளில் அதிகம் காணப்பட்டாலும் இந்தச் சத்து பெரும்பாலானோருக்குக் குறைவாகவே உள்ளது. ஆரஞ்சு வகை பழங்கள், பிரெக்கொலி இவற்றிலும் வைட்டமின் பி9 கிடைக்கிறது.

வைட்டமின் டி


வைட்டமின் டி உடலிலுள்ள எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. இது சூரிய ஒளியில் கிடைக்கிறது. ஆனாலும் நம் நாட்டில் வைட்டமின் டி சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர் அநேகர் உள்ளனர். வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினாகும். முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றில் வைட்டமின் டி கிடைக்கிறது.

வைட்டமின் பி12


இரத்த ஓட்டம், மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி12 அவசியமாகும். வைட்டமின் பி12 குறைந்தால் இரத்த ஓட்டம், மூளை மற்றும் நரம்பு என முக்கிய செயல்பாடுகள், உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.


ஆட்டின் ஈரல் மற்றும் சிறுநீரகத்தில் வைட்டமின் பி 12 உள்ளது. சிறுமீன்களிலும் இது காணப்படுகிறது. சேயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றிலும் வைட்டமின் பி12 உள்ளது.

வைட்டமின் ஏ


வைட்டமின் ஏ குறைவு பெரும்பாலும் பிள்ளைகளுக்குக் காணப்படுகிறது. இது சிறுபிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடாகும். பார்வை திறனை பாதித்தல், கண்களுக்கு பிரச்னை அளித்தல் போன்று பல்வேறு குறைபாடுகள் இதனால் ஏற்படக்கூடும்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிரெக்கொலி, முட்டையின் மஞ்சள் கரு, மாம்பழம், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

ஸிங்க்


துத்தநாகம் என்னும் ஸிங்க் குறைபாடும் இந்தியாவில் பெருகி வருகிறது. துத்தநாகம் குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஆண்கள் ஒருநாளைக்கு 11 மில்லி கிராம் துத்தநாகச் சத்தும், பெண்கள் 8 மில்லி கிராம் துத்தநாக சத்து சேரும்வண்ணம் உணவுகளை சாப்பிடுவது அவசியம். பூசணி விதைகள், அல்மாண்ட், வால்நட், எள், கேழ்வரகு ஆகியவற்றில் துத்தநாக சத்து அதிகம்.

You'r reading பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தவிர்ப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை