தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு 2010ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்ததில் இருந்தே சந்திக்காத பிரச்சனைகள் கிடையாது. ஓடி ஓடி உழைத்த போதும் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வெறுத்துப்போன குஷ்பு 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து விலகி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். என் தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன் என பெருமையாக இருந்த குஷ்புவிற்கு உட்கட்சி பூசலுக்குப் பெயர் போன காங்கிரஸ் துளியும் நிம்மதியை தரவில்லை.
ஒத்த ட்வீட்டை கூட தலைப்புச் செய்தியாக மாற்றும் குஷ்புவின் திறமையையும் புகழையும் கண்டு அஞ்சிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்கிரஸில் இணைந்த குஷ்புவுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல் புறக்கணித்தனர். பதவி நம்மைத் தேடி வர வேண்டும், நாம் அதைத் தேடி ஓடக்கூடாது என மெளனம் காத்த குஷ்பு, காங்கிரஸ் தலைமை மீது கொண்ட நம்பிக்கையால் வேகமும், வீரியமும் குறையாமல் செயல்பட்டு வந்தார்.
மனதில் பட்டதை உதட்டோடு மறைக்காமல் பளீச்சென பேசும் குஷ்புவின் தில்லான கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில பெரிய தலைகளின் தூக்கத்தை கொடுத்தது. இதனால் கட்சியிலிருந்து குஷ்புவை முழுவதுமாக ஓரங்கட்ட திட்டம் போட்டனர். பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும் இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலத்தில் பொளந்துகட்டும் அளவிற்கு அறிவாளியான குஷ்புவிற்கு இந்த மாதிரியான குறுக்கு புத்தியாளர்களின் யோசனை தெரியாமல் இல்லை. அதனால் தான் பெண்களுக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் உரிய வகையில் பாதை அமைத்துக் கொடுக்கும் பாஜகவில் இணைந்தார்.
பெண்கள் இனமே அயர்ன் லேடி போல் பிரம்மிப்புடன் உற்று நோக்கும் குஷ்புவிற்கு வேற லெவலுக்கு எதையாவது செய்ய வேண்டும் என காத்திருந்த பாஜக தலைமைக்கு வர உள்ள சட்டமன்ற தேர்தல் பெரும் வாய்ப்பாக அமைந்தது. அரசியல் களத்தில் கண்ணுக்கு தெரியாத எதிரிகளை எதிர்த்தே கத்தி சுற்றிய குஷ்பு, கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் மோத அஞ்சுவாரா என்ன?. குஷ்புவை களமிறக்க இது தான் சரியான தொகுதி என ஆயிரம் விளக்கில் அவரை வேட்பாளராக அறிவித்தனர்.
மக்களின் நலனுக்காக உழைக்க காத்திருந்த குஷ்பு, கிடைத்த வாய்ப்பை தவறவிடுவாரா?. எங்களுடைய கோட்டை என திமுக மார்த்தட்டிக்கொண்ட ஆயிரம் விளக்கில், இப்போது குஷ்பு ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இல்லத்தரசிகளின் நாடி பிடித்து அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்து வைத்திருக்கும் குஷ்பு, ஆயிரம் விளக்கு வளம் பெற தன்னிடம் உள்ள ஐடியாக்களை அள்ளிவிட, ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மக்களும், சிறுபான்மையின மக்களும் வாடி ராசாத்தி...என குஷ்புவை வாசலில் நின்று ஆராத்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர் என பல ஆண்டுகளாக அப்பகுதியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தூசி தட்டி எடுத்துள்ள குஷ்பு, பதவியேற்ற மறுநாளில் இருந்தே ஆயிரம் விளக்கை மாற்றிக்காட்டுவேன் என மக்களிடம் உறுதி கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடன் மூதாட்டிகள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாசம் காட்டும் குஷ்புவை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்க்க ஆரம்பித்துள்ளனர் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள். பெண்களிடையே குஷ்புவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவை பார்க்கும் போது ஆயிரம் விளக்கில் யாரும் எதிர்பாராத அளவிற்கு வாக்குகளை அள்ளி குஷ்பு வரலாற்றுச் சாதனை படைப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.