கர்ப்பிணிகள் காபி அருந்தலாமா: ஆய்வு கூறுவது என்ன?

by SAM ASIR, Mar 30, 2021, 09:34 AM IST

கருவுற்று இருக்கும் காலத்தில் பல்வேறு விதங்களில் பெண்கள் கவனமாக இருப்பர். எதை சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது? என்று பல அறிவுரைகள் கூறப்படும். கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சில ஊட்டச்சத்து உணவுகளும் பரிந்துரைக்கப்படும். அந்த நோக்கில் கருவுற்றிருக்கும் பெண்கள் காபி அருந்தலாமா என்று ஓர் ஆய்வு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தேசிய சுகாதார நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனத்தில் நடத்தப்பட்டது.

பல்வேறு இனம் மற்றும் வெவ்வேறு பின்னணியை கொண்ட 2000 கர்ப்பிணிகளிடம் 12 மருத்துவ மையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 13 வார கருவை கொண்டிருந்த பெண்கள் ஆய்வுக்காக பதிவு செய்யப்பட்டனர். 10 முதல் 13 வார கர்ப்ப காலத்தில் இரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. காஃபைன் இரத்தத்தில் சேரும்போது பாரன்தைன் என்ற கூட்டுப்பொருள் உருவாகிறது. இவை இரண்டும் இரத்தத்தில் எந்த அளவு உள்ளன என்று பரிசோதனை செய்தனர்.

காபி அருந்தினால் கர்ப்பிணிகளின் கருப்பையும் தொப்புள் கொடியும் சுருங்குவதால் இரத்த ஓட்டம் குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆகவே, கரு வளர்தல் தொடர்பான ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. காஃபைன் இரத்தத்தில் குறைவாக காணப்படும் பெண்களைக் காட்டிலும் சராசரியாக அதிக அளவில் காஃபைன் கொண்டிருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் 84 கிராம் எடை குறைவாக இருப்பதாகவும், உயரம் 0.44 செமீ குறைவாக இருப்பதாகவும், தலையின் சுற்றளவு 0.28 செமீ குறைவாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

கர்ப்பிணிகளிடம் அவர்கள் அருந்திய காபியின் அளவு கேட்டுத் தெரிந்துகொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு நாளில் 50 மில்லி கிராம் காஃபைன் சேர்க்கும் பெண்கள், அதாவது அரை கப் காஃபி அருந்துவோருக்கு பிறக்கும் குழந்தைகளின் எடை, காபி அருந்தாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் 66 கிராம் குறைவாக இருப்பதாகவும், குழந்தைகளின் தொடையின் சுற்றளவு 0.32 செமீ குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தினசரி 200 மில்லிகிராமுக்கும் குறைவாக காஃபைன் சேர்த்துக்கொள்ளும் கர்ப்பிணிகளின் கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்படுவதாகக் கூறும் இந்த ஆய்வு அதற்கு அதிகமாக காஃபைன் சேர்த்துக்கொண்டால் கருவுக்கே பாதிப்பு நேரக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.

You'r reading கர்ப்பிணிகள் காபி அருந்தலாமா: ஆய்வு கூறுவது என்ன? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை