கோடை காலம், மழைக்காலம் என எந்த சீசனிலும் மாறாதது ஜலதோஷமும் அலர்ஜியும்தான். காலையிலிருந்து விடாமல் தும்மியிருப்போம். ஆனால், அது ஜலதோஷமா, அலர்ஜியினாலா என நமக்குத் தெரியுமா?
முதலில் சளி, ஜலதொஷம் எல்லாம் ஒரு வகை தொற்று என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒருவருக்கு சளித்தொல்லையோ ஜலதோஷமோ இருந்தால் அது ஒரு சின்ன கைக்குலுக்கலிலோ இல்லை ஒரு பெரிய பலமான தும்மலிலோ கூட பக்கத்தில் இருப்பவருக்குப் பரவிவிடும்.
இந்த சூழலில் அது வெறும் சளி, ஜலதோஷமாக இருந்தால் ஒரு வாரத்திலோ, ஏழு நாள்களிலோ உங்கள் சளித்தொல்லை காணாமல் போய்விடும்.
ஆனால், அலர்ஜி என்பது முற்றிலும் வேறு. இது பரவாது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சுரப்பிகள் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக வேளை செய்து நமக்கு ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
குறிப்பிட்டுச் சொல்ல ஜலதோஷத்துக்கும் அலர்ஜிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலில், சளி, ஜலதோஷம் எல்லாம் மூன்று நாளிலிருந்து அதிகப்பட்சமாக 14 நாள்கள் வரையில் இருந்து மறைந்துவிடும். ஆனால், அலர்ஜி என்பது ஒரு தொடர் கதை. உங்களுக்கு தூசி அலர்ஜி என்றால் தூசி ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு அலர்ஜிப் பிரச்னையால் சளி, கண் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் ஆகியப் பிரச்னைகள் ஏற்படும்.
காலம்: சளி, ஜலதோஷம் ஆகியவை கிருமித் தொற்று ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாளில் பரவத்தொடங்கும். கண்டிப்பாக ஒரே நாளில் தீராது. அலர்ஜியைப் பொறுத்தவரையில் ஒவ்வாத ஒரு சிறு தூசி என்றாலும் உடனே தொற்றிக்கொண்டு நம்மை படுத்திவிடும்.