தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடல் மட்டும் கட்டுமஸ்தாக மாறாது. மாறாக, இதயப் பிரச்னைகளுக்கும் அது முடிவுகட்டும்.
அமெரிக்கன் இதய கூட்டமைப்பு இதழில், சீரான உடற்பயிற்சி இதயப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. `உங்கள் குடும்பத்திலேயோ அல்லது உங்கள் பரம்பரை ரீதியாக யாருக்கேனும் இதயப் பிரச்னைகள் இருந்தாலும் கூட, சீரான உடற்பயிற்சியின் மூலம் அதை விரட்டியடிக்கலாம்' என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் எரிக் இங்கெல்சன்.
இந்த ஆய்வு மூலம் பல நல்ல விஷயங்கள் தெரியவந்திருப்பது உண்மைதான். ஆனாலும், வெறுமனே உடற்பயிற்சி செய்வது மட்டும் உங்கள் உடலுக்கு போதுமான பலனை தந்துவிடாது. கூடவே, நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் தான் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த 5 உணவுகளை தினசரி உட்கொண்டு வந்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் இருக்கும்.
1. ஓட்ஸ்: ஓட்ஸில் இருக்கும் ஒரு வகை நார்ச்சத்து உடலுக்குத் தேவையான பல சத்துகளை கொடுக்கும். அதே நேரத்தில் இதய சம்பந்தமான பிரச்னைகளுக்கும் பை-பை சொல்ல வைக்கும். முக்கியமான, உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்டராலை போக்கும்.
2. உலர் உணவுகள்: அதிகமாக விதை, கொட்டைகள் உட்கொள்வது உடலில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும். இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகள் அதிகம் இருக்கும். இது இதயத்துக்கு நன்மை பயக்கும்
3. பருப்பு வகை உணவுகள்: இந்த வகை உணவுகளில் அதிக நார்சத்து இருக்கும். மேலும், பல அடிப்படை சத்துக்களை இந்த வகை உணவுகள் வைத்திருப்பதால், இதை தினமும் உட்கொள்வது இதயத்துக்கு நல்லது.
4. பழங்கள்: பழ வகை உணவை, வெறுமனவும் பல உணவுகளில் சேர்த்தும் உட்கொள்ளலாம். இதில் உள்ள இனிப்பு உடலுக்கு நல்லதும் செய்யும். இதயத்தையும் வலுப்படுத்தும்.
5. ஆளி விதைகள்: இதில் இருக்கும் ஒமேகா 3- ஃபேட்டி அமிலம், நார்சத்து இதய வலிமையை அதிகரிக்க வல்லது. இதையும் உணவுடன் சேர்த்துக் கொள்வது பயன் தரும்.