மன்னிப்புக்குமேல் மன்னிப்பு கேட்ட ஸக்கர்பெர்க்

மன்னிப்புக்குமேல் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி

May 24, 2018, 18:04 PM IST

பிரௌசல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினரை ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் சந்தித்தார். இந்த சந்திப்பு 80 நிமிடங்கள் நடந்தது. அப்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் தவறுகளுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக எட்டு கோடியே எழுபது லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலட்டிகா என்ற நிறுவனத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது. இதில் இருபத்தேழு லட்சம் பேர் ஐரோப்பிய குடிமக்கள் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தலைவர் ஆண்டோனியா தாஜனியை முதலில் சந்தித்த பிறகு கான்பரன்ஸ் ஆஃப் பிரசிடெண்ட்ஸ் என்ற நாடாளுமன்ற குழுவினரை மார்க் ஸக்கர்பெர்க் சந்தித்தார். அப்போது குழுவினரின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் ஸக்கர்பெர்க் தவிர்த்ததாக தெரிகிறது.

அவரது மழுப்பலான பதில்களால் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் கோபமுற்றுள்ளனர். "நான், ஆம் இல்லை என்று சொல்லக்கூடிய ஆறு கேள்விகளை உங்களிடம் கேட்டேன். ஆனால் ஒரு கேள்விக்குக்கூட நேரடியான பதில் கிடைக்கவில்லை" என்று பிலிப் லாம்பெர்ட்ஸ் என்ற பசுமை கட்சியின் உறுப்பினர் ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் கேள்விகளை கேட்பதற்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் மூன்று நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. கடைசியாக மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பதில் வழங்குவதற்கு நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், உறுப்பினர்களின் கேள்விகள் அனைத்துக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் எழுத்து வடிவில் பதில் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

பொய்யான செய்திகள் மற்றும் தீவிரவாதம் குறித்ததான பதிவுகள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் கேள்வி எழுப்பியபோது, பொய்யான செய்திகள், தேர்தல்களில் வெளிமக்களின் தலையீடு மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இவற்றை ஃபேஸ்புக் கையாண்டு வந்த விதத்திற்காக வருத்தம் தெரிவித்தார். பல கூட்டங்களில் அவர் மன்னிப்பு கேட்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் சாட்சியளித்தபோதும் அவர் இதே வார்த்தைகளை பயன்படுத்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மன்னிப்புக்குமேல் மன்னிப்பு கேட்ட ஸக்கர்பெர்க் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை