Wednesday, May 12, 2021

தைராய்டு யோகாசனம் - சொல்லி கொடுங்க!!!

Cure Thyroid Yogasana

by Vijayarevathy N Oct 18, 2018, 10:05 AM IST

நான் நோய்க்கு இரையாகித் துன்பம் அனுபவிக்கப் பிறக்கவில்லை. ஆரோக்கியமாக இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கவே பிறந்தேன். அதற்கு உடல் நலம் அவசியம். ஆகையால் எதை விட்டாலும் இனி யோகாவை விட மாட்டேன்'' என்று தினமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், யோகா செய்வதற்கான அவகாசம், நேரம், உற்சாகம் ஆகியவை தானாகவே கிடைக்கும். தூக்கம் சோம்பல் என்று எது தலை தூக்கினாலும் அதனை மனதின் பலத்தால் விரட்டி அடிக்க முடியும்!

சோம்பல் என்று சொல்லும்போதே நினைவுக்கு வருவது தைராய்டு. இது சரியல்ல! நம் உடல், தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்தி செய்வதே தைராய்டு நோய்க்குக் காரணம். அயோடின் குறைபாட்டினால் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாகச் சுரக்கும். இது குறை தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. அதீத கவலை மற்றும் மன அழுத்தமும் தைராய்டு சுரப்பிகளைச் சரியாக வேலை செய்ய விடாமல்
முடக்கிவிடும்.

சிகிச்சை: 
தைராய்டு பிரச்சினையை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஆசனங்களைத் தொடர்ந்து செய்ய நல்ல முன்னேற்றம் காணலாம். ஏற்கெனவே நோயாளிகள் செய்துகொள்ளும் மருத்துவச் சிகிச்சையுடன் யோகாவையும் சேர்த்து செய்தால் பலன் நிச்சயம். இந்த ஆசனம் செய்தால் தைராய்டு பிரச்சினை குணமாகும் என்று முடிவாகச் சொல்லிவிட முடியாது. தொண்டையில் பிரச்சினை என்பதால் தொண்டைக்கான ஆசனங்களைப் பரிந்துரைக்கிறோம். தைராய்டு பிரச்சினை உள்ளவர்களின் உடல் எடை, வயது, உடலின் தன்மை ஆகியவற்றை வைத்து அவர்களால் எந்த அளவு ஆசனம் செய்ய முடியுமோ அதன்படி ஆசனங்களில் சிறிய மாற்றங்கள் செய்து அவர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்க வேண்டியதும் மிக மிக அவசியம். தைராய்டு நோயாளிகள் அபாசனம், விபரீதகரணி மற்றும் சர்வாங்காசனம் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த இதழில் சர்வாங்காசனம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

சர்வாங்காசனம்:

சர்வ அங்க ஆசனம் = சர்வாங்காசனம். பெயருக்கேற்ப உடலின் அனைத்து அங்கங்களையும் சீராக்கிடும் ஆசனம் இது.
1. தரையில் மல்லாந்து படுக்கவும்.
2. படுத்த நிலையிலேயே, மூச்சை வெளியிட்டு இரு கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றைச் சேர்த்துச் செங்குத்தாகத் தூக்கவும்.
3. கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்துக்கொள்ளவும். சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும். மேலிருக்கும் இரு கால் கட்டை விரல்களையும் பார்க்க வேண்டும். கீழ்த்தாடை பகுதி நெஞ்சை ஒட்டியிருக்க வேண்டும். கழுத்துப் பிடரி சரியாகத் தரை விரிப்பில் படிந்திருக்க வேண்டும். முதுகெலும்பு நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
4. இந்த நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். சுவாசம் நார்மலாக இருக்கட்டும்.
5. மூச்சை உள்ளிழுத்துக் கால்களை நிதானமாக இறக்கவும். முதுகெலும்பை இறக்கிப் படுத்த நிலைக்குத் திரும்பவும்.
ஆரம்ப நிலையில் இந்த ஆசனத்தை மூன்று நிமிடம் செய்தால் போதும். நாள் செல்லச் செல்ல நேரத்தை அதிகரிக்கலாம். தினசரி இந்த ஆசனத்தை ஒரு முறை செய்தால் போதும். அடுத்த ஆசனத்தைத் தொடங்கு முன் ஒரு நிமிடம் ஒய்வெடுக்க வேண்டும்.

பலன்கள்:

 1. மூளைக்கு அதிக ரத்தம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  2. தைராய்டு சுரப்பியின் வியாதிகளில் இருந்து நிவாரணமளிக்கும். பிட்யூட்டரி சுரப்பியின்
  வேலைத்திறனை மேம்படுத்தும்.
  3. உடலை இளமையாக, வலிமையாக வனப்பாக வைக்க உதவும்.
  4. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு இந்த ஆசனம் சிறந்தது.
  5. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் இவற்றைப் போக்க உதவும். தோல் நோய்கள், டான்சில்ஸ் போன்றவற்றுக்கும் இந்த ஆசனம் நிவர்த்தி அளிக்கும்.
  மேற்சொன்ன ஆசனத்தைச் செய்வதற்குக் கடினம். ஆனாலும் முறையான பயிற்சியால் செய்யலாம். தினமும் தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்யக் கண்கூடாக வித்யாசம் தெரியும். தைராய்ட் பிரச்சினை குறைந்து வருவதை உணர முடியும்.

எச்சரிக்கை:

இந்த ஆசனங்களை நோயாளிகளின் வயது, என்ன வேலை பார்க்கிறார், அவரின் உடல் நிலை போன்றவற்றைப் பொறுத்து தான் யோக சிகிச்சை தர வேண்டும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தலைவலி இருப்பவர்கள் செய்யக் கூடாது. மேலும் சிலர் மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோயாளிகள் மனதளவிலும் உடல் அளவிலும் கவுன்சிலிங் அளித்த பிறகே முறையாக சிகிச்சையை தொடங்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யும் முன்பு யோகா ஆசிரியரைக் கலந்தாலோசிப்பது அவசியம். ஆசனம் செய்யும்போது கண்களில், காதுகளில், தலையில், கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டால் ஆசனத்தை நிறுத்திவிட்டு யோகா ஆசிரியரிடம் செல்ல வேண்டும். செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. கண் வியாதி உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ட 2 மணி நேரம் கழித்துத்தான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்!

You'r reading தைராய்டு யோகாசனம் - சொல்லி கொடுங்க!!! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Health News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை