ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை விழாவுக்காக, சென்னையில் பலத்த பாதுகாப்பு வழங்கவும், ரோந்து செல்லவும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுத பூஜை விழாவையொட்டி சென்னை நகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பூஜை செய்து சாலையின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு சாலையின் நடுவே உடைக்கப்படும் பூசணிக்காயால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் சாலைகளின் ஓரங்களில் பூசணிக்காயை உடைத்து, விபத்துகள் அற்ற ஆயுத பூஜை விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.