பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி இடையேயான பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தமக்கு பிறந்த நாள் பரிசாக வரும் தேர்தலில் வெற்றியை தேடிக் தாருங்கள் என மாயாவதி இரு கட்சித் தொண்ட்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் சரி சமமான இடங்களில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளன.24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. 1994-ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் முதல்வராக இருந்த போது அவரது அரசுக்கு அளித்த ஆதரவை திடீர் என மாயாவதி வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.
இதனால் ஆத்திரம் கொண்ட சமாஜ்வாதி தொண்டர்கள் மாயாவதி மீது கொடூர தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு கட்சியினரும் மோதிக் கொண்டதுடன் சமீப காலம் வரை எதிரிகளாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி முடிவை 2 நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் மாயாவதி தமது 63-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று வாழ்த்தினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் பேசுகையில், பழைய கசப்பான அனுபவங்களை மறந்து, வரும் தேர்தலில் இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து பணியாற்றி அமோக வெற்றி தேடித் தருவதே எனக்கு பிறந்த நாள் பரிசாகும் என்றார் மாயாவதி .