பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2014 ஆகஸ்ட்க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளில் சுமார் 70% இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிருப்தியை அளிக்கிறது.
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையேற்றதால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நாட்டு மக்களிடம் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற பெயரில் வழிப்பறி செய்துவருகின்றன.
எனவே, காலம் தாழ்த்தாமல் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனே குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், தினமும் விலை நிர்ணயம் என்ற முறையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.