"வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட இந்தத் தொகையை கட்டமுடியாது," என்று அங்கலாய்க்கிறார் அப்துல் பாஷித். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக 23,67,71,524 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு வீட்டுக்கு ஆகும் மின்சாத்தை தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். 2 கிலோ வாட் ஆற்றல் கொண்ட வீட்டு மின் இணைப்பில், 178 அலகு (யூனிட்) மின்சாரம் செலவாகியுள்ளது. அதற்கு, கேட்டதும் மூச்சுமுட்டுமளவுக்கு கட்டணம் விதித்து சாதனை படைத்துள்ளது உத்தரபிரதேச மின்வாரியம்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோசி நகரில் வசித்து வரும் அப்துல் பாஷித், எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக அதிகாரிகளை தேடி அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். செய்தி நிறுவனம் ஒன்றிடம் இது குறித்து கருத்து தெரிவித்த மின்வாரிய செயற்பொறியாளர் சாதப் அஹ்மது, "மீட்டர் அளவுகளை குறிக்கும்போது நடக்கும் சில தவறுகளால் இதுபோன்ற கட்டணச்சீட்டுகள் வந்துவிடுகின்றன. குறிப்பிட்ட வீட்டில் மீண்டும் மின்மீட்டரின் அளவுகள் சரியானமுறையில் பதிவு செய்யப்படும். அதற்கேற்ப புதிய கட்டணச்சீட்டு வழங்கப்படும்.
அதன்பின், அவர் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது," என்று தெரிவித்துள்ளார்.
"உத்தர பிரதேசம் முழுவதுக்கும் செலவான கரண்டுக்கு என்கிட்ட காசு கேட்குறாங்க போல.." என்று புலம்பிக்கொண்டு, புதிய பில்லுக்காக காத்திருக்கிறார் அப்துல் பாஷித்!