இந்தியாவில் கால்பந்துக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள மாநிலம் என்றால் நமது அண்டை மாநிலமான கேரளாவை குறிப்பிடலாம்.
நம் ஊர்களில் கிரிக்கெட் விளையாடுவதை போல அங்கு மூலை முடுக்கெல்லாம் கால்பந்து விளையாடுவதை பார்க்கலாம். அதேபோல் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த 'சுடானி ஃப்ரம் நைஜீரியா'; கேப்டன் போன்ற படங்களும் மலையாள நாட்டில் வெற்றி பெற தவறவில்லை.
இந்நிலையில் கேரளாவில் 7எஸ் லீக் என்ற பிரபலமான உள்ளூர் கால்பந்து தொடரில் ஃபிஃபா மஞ்சேரி அணிக்காக விளையாடி வருபவர் தான் ரீத்வான். மலபுரத்தைச் சேர்ந்த இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எதிர்பாராதவிதமாக திருமண நாளன்று அவரின் அணிக்கு போட்டி இருந்தது. கால்பந்து போட்டியின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்ட ரித்வானால் திருமணத்தை தள்ளி போட முடியவில்லை. அதேநேரம் போட்டியில் பங்கேற்கவும் ஆசைப்பட்டார். அதனால் திருமண நாள் அன்று காலை மணப்பெண்ணின் அறைக்கு சென்று அவரிடம் தனது ஆசையை கூறி "எனக்கு சிறிது நேரம் அனுமதி கொடு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்துவிடுவேன்" எனக் கூறிவிட்டு மணப்பெண்ணின் அனுமதியோடு போட்டியில் பங்கேற்று உள்ளார்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மணமகளை கரம்பிடித்துள்ளார். ரித்வானின் செயலால் பெண் வீட்டார் வருத்தமடைந்தாலும் மணப்பெண் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொண்டதால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வலைதளங்களில் வைராலக இந்தச் செய்தி வலம் வர மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் ரித்வானை வெகுவாக பாராட்டியுள்ளார்.
ரித்வானின் செயலை பாராட்டி டுவிட்டரில், "மணப்பெண் அனுமதி பெற்று போட்டியில் கலந்துகொண்டு உள்ளார். இதன் மூலம் கால்பந்தில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது எனத் தெரிகிறது. எனக்கு ரித்வாணை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது." என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.