காதலித்ததற்காக செப்டிக் டாங்கை சுத்தம் செய்ய சொல்லி வெட்டி கொலை - 6 பேருக்கு தூக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில், தலித் இளைஞர்கள் 3 பேர் சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 6 பேருக்கு மரண தண்டனை விதித்து, நாசிக் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Jan 21, 2018, 08:48 AM IST

மகாராஷ்டிர மாநிலத்தில், தலித் இளைஞர்கள் 3 பேர் சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 6 பேருக்கு மரண தண்டனை விதித்து, நாசிக் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகரைச் சேர்ந்தவர் சச்சின் காரு (24). நெவேஸா பகுதியிலுள்ள ஜூனியர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு படித்த, சோனாய் கிராமத்தைச் சேர்ந்த உயர் வகுப்பை சேர்ந்த, ரகுநாத் டராண்டாலே என்பவரை காதலித்துள்ளார்.

இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென்று முடிவு செய்துள்ளனர். இதனையறிந்த பெண்ணின் தந்தை ரகுநாத் டராண்டலேவும் அவரது குடும்பத்தினரும், சச்சின் காருவை 2013-ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

சச்சின் காருவும், தனது நண்பர்கள் சந்தீப் தன்வர் (25), ராகுல் கண்டாரே (20) ஆகியோருடன் சோனாய் கிராமத்திலிருந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நண்பர்கள் இருவரையும் வீட்டு செப்டிக் டேங்கை சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு, சச்சின் காருவை மட்டும், தனியாக அழைத்துச் சென்ற பெண்ணின் குடும்பத்தினர், அவரது தலையை தனியாக துண்டித்துள்ளனர்.

அவரது நண்பர்களையும் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர்,சச்சின் காருவை செப்டிக் டேங்குக்குள் போட்டு மூடி விட்டு, அவரது நண்பர்களான தன்வார், கண்டாரே ஆகிய இருவரின் உடலைதுண்டு துண்டாக வெட்டி, ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் புதைத்துள்ளனர்.

சச்சின் காருவும், அவரது நண்பர்களும் காணாமல் போனது பற்றி அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். கொலை நடந்த 24 மணி நேரத்துக்குப் பிறகு, காருவின் உடல் பாகங்களை செப்டிக் டேங்கில் இருந்து கைப்பற்றினர்.

மேலும் 72 மணிநேர விசாரணைக்குப் பிறகு கிணற்றில் புதைக்கப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இது மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறிய இந்த ஆணவக் கொலை பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுதொடர்பாக 7 பேர் மீது நாசிக் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஜனவரி 15ஆம் தேதி, தலித் இளைஞர்கள் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின்தந்தையான ரகுநாத் டராண்டாலே (52), ரமேஷ் டராண்டாலே (42), பிரகாஷ் டராண்டாலே (38), பிரவீன் டராண்டாலே (23), அசோக்நவ்கிரே (32) சந்தீப் குர்ஹே (37) ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று நாசிக் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர். வைஷ்ணவ் அறிவித்தார். ஒருவரை விடுதலை செய்தார்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி வைஷ்ணவ், குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்ட 6 பேருக்கும் மரண தண்டனையும், தலா 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தொகையை, சச்சின் காரு, சந்தீப் தன்வர், ராகுல் கண்டாரே ஆகியோரின் குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

You'r reading காதலித்ததற்காக செப்டிக் டாங்கை சுத்தம் செய்ய சொல்லி வெட்டி கொலை - 6 பேருக்கு தூக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை