சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 30 நிமிடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடித்தனர்.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் சிபிஐ விசாரிக்க முயன்ற சம்பவத்தால் கடந்த சில நாட்களாக மே.வங்க மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. சிபிஐயின் நடவடிக்கைகளை எதிர்த்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா நடத்தினார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தலாம், ஆனால் கைது செய்யக் கூடாது என நிபந்தனை விதித்தது. மேலும் விசாரணையை மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடத்தவும் உத்தரவிட்டு பிரச்னையை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது.
இதன்படி ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் இன்று மூத்த வழக்கறிஞர் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆஜரானார்.
டெல்லியில் இருந்து வந்த உயர் சிபிஐ அதிகாரிகள் 5 பேர் ராஜீவ்குமாரிடம் 30 நிமிடம் மட்டும் விசாரணை நடத்தி விட்டு திருப்பி அனுப்பினர்.