அசாமிய பாடகர் மறைந்த பூபென் ஹசாரிகாவுக்கு மத்திய அரசு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்கப் போவதில்லை என அறிவித்த அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா நாலே நாட்களில் தனது கருத்தை மாற்றி விருதை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இந்தாண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அசாமிய மொழி பாடகர் மறைந்த பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட மசோதாவால் வடகிழக்கு மாநிலத்தவர் பெருமளவில் பாதிக்கப்படும் நிலையில், தமது தந்தைக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பது சரியாக இருக்காது. அதனால் விருதை வாங்கப் போவதில்லை என்று அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா கடந்த திங்களன்று அறிவித்திருந்தார்.
விருதை ஏற்க மாட்டேன் என்று அறிவித்த நான் கே நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் தேஜ்.இது குறித்து வாட்ஸ் அப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தந்தையின் சமூக சேவைக்காகவும், அசாமிய மொழிக்கு அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என் தந்தை சார்பில் பாரத ரத்னா விருது பெறுவது கனவு போல் கருதுகிறேன் என்று ஆகா, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பூபென் ஹசாரிகாவின் ஒரே மகனான தேஜ் ஹசாரிகா அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறந்த ஓவியரான தேஜ் கதாசிரியர், பதிப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.