புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடர்கிறார். ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ஆளுநர் கிரண்பேடி அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு அனுமதி மறுக்கிறார். தன்னிச்சையாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். ராப்பகலாக 4-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது . ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி திரும்பும் வரை தர்ணா தொடரும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் போராட் டத்தை தீவிரப்படுத்துவது என நேற்று தமது கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக கருப்புக்கொடி போராட்டம், மறியல், சிறைகு நிரப்பும் போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரண்பேடி புதுச்சேரி திரும்பும் 21-ந் தேதியன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.