காஷ்மீரில் இந்தியப் படை வீரர்கள் 41 பேரை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கொன்று சிதைத்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்க, பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளோ தீவிரவாதிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிப் பட்டம் கொடுத்து கொக்கரித்துள்ளன.
நேற்று முன்தினம் காஷ்மீரின் புலவாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 41 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாதச் செயலை உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக கண்டித்துள்ளன. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உரம் போட்டு வளர்த்து வரும் பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானோ காஷ்மீர் சம்பவத்திற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று போலிக் கண்ணீர் வடித்தாலும்,அந்நாட்டு பத்திரிகைகள் காஷ்மீர் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள செய்திகள் இந்தியா மீதான துவேஷத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான 'தி நேசன்' முன்பக்கத்தில், காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும்,இந்திய வீரர்களை ஊடுருவல்காரர்கள் எனவும், படுபாதகச் செயலை செய்த தீவிரவாதியை காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்தியாகியாகவும் வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு சவால் விடும் பாகிஸ்தானுக்கு இந்தியா இனியும் வார்த்தைகளில் பதிலளிக்காமல் செயலில் இறங்கி மரண அடி கொடுக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த இந்தியர்களின் கோபமாக உள்ளது.