ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான துணை ராணுவப் படையினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது என அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை தீவிரவாதிகள் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறைந்திருந்து தாக்கும் உத்தியைக் கையாளும் தீவிரவாதிகளைத் திருப்பித் தாக்கி அழிப்பதில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதிவிரைவில் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்ற உறுதி ராணுவத்திடமிருந்து வந்திருக்கிறது.
எதிரிகளின் இந்தக் கொடூர தாக்குதலில் பலியானவர்கள் தவிர படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
நாடு முழுவதும் மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோர சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது. பலியான மற்றும் படுகாயமடைந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.