இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினமாக நேற்று முன்தினம் அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைகொள்ள செய்துள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய விலையை தீவிரவாதிகள் அனுபவிப்பார்கள் என ஒற்றை குரலாக இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு தனி விமானங்களில் கொண்டுசெல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசாங்கள் நிதி உள்ளிட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன. இதேபோல் மற்றவர்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அனைவரது குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உயிரிழந்த அத்தனை வீரர்களின் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் எவ்வளவு செய்தாலும் இறந்தவர்களின் தியாகத்துக்கு ஈடு ஆகாது. இருப்பினும் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு நான் நடத்தி வரும் சேவாக் இன்டெர்நேஷ்னல் பள்ளி மூலம் இலவசமாக கல்வி அளிக்க தயாராக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
அவரின் அறிவிப்பு வரவேற்புகள் குவிந்துள்ளன. இதேபோல் மற்ற பிரபலங்களுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை குவிந்துள்ளது.