புல்வாமா தாக்குதல் நடந்த தகவல் கிடைத்த மறுநிமிடமே பிரதமர் மோடி, தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அவசர ஆலோசனை நடத்தினார் என்றும், காங்கிரசின் குற்றச்சாட்டு பாகிஸ்தான் பிரதமரின் செயல் போல் உள்ளது என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் நடந்த நாளில் பிரதமர் மோடி உத்தரகாண்டில் படு பிசியாக டிஸ்கவரி சேனலின் டாக்குமெண்டரிக்காக சூட்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.படகு சவாரி செய்தார். மக்கள் துயரத்தில் இருக்க விருந்தினர் மாளிகையில் டீ, சமோசா சாப்பிட்டார் என்றெல்லாம் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதுதான் பிரதமரின் தேசபக்தியா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். புல்வாமா தாக்குதல் நடந்த பிப்ரவரி 14-ன் தேதி நண்பகலில் உத்தரகாண்ட் கோர் பெட் புலிகள் சரணாலயத்தில் அரசுத் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுலா மேம்பாடு குறித்த டிஸ்கவரி சேனலுக்கான சூட்டிங்கில் சிறிது நேரமே செலவிட்டார். இதெல்லாம் புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு முன்பே முடிந்து விட்டது.
ருத்ராபூர் பாஜக பொதுக் கூட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது மாலை 3.30 மணிக்கு புல்வாமா தாக்குதல் தகவல் தெரிய வர, உடனடியாக அவசர நடவடிக்கைகள் குறித்து பயணித்தபடியே ஆலோசனை நடத்தினார். பாஜக பொதுக்கூட்ட மேடைக்கும் செல்லாமல், கூட்டத்தினரை திருப்திப்படுத்த தொலைபேசியில் 7 நிமிட உரை நிகழ்த்தினார். வழியில் ராம்நகர் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் சிறிது நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
4 மணி நேர கார் பயணமாக பரேலி சென்று விமானம் பிடித்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். உண்மை நிலை தெரியாமல் காங்கிரஸ் வைத்துள்ள குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்குத் தான் வலு சேர்ப்பது போல் உள்ளது. காங்கிரசின் குரல் பாகிஸ்தான் பிரதமரின் குரல் போல் உள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.