வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஒட்டுப்போடலாம் என்று பரப்பப்பட்ட செய்திகள் வெறும் புரளி என்றும், இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டுப் போடும் வசதியை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி போலியானது என தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், ஆன்லைனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாம் என்ற செய்தியை தேர்தல் ஆணையத்தின் லோகோவுடன் தவறாக பரப்பியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஆன்லைனில் ஓட்டுப் போட வசதி செய்ய வேண்டுமானால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி எதுவும் கொண்டு வரப்பட வில்லை.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் ஓட்டை தமது பிரதிநிதிமூலம் வாக்களிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஆனால் அது சட்டமாக்கும் முன்பே மக்களவை ஆயுள் முடிந்து விட்டதால் காலாவதி ஆகிவிட்டது என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப் போட வேண்டுமெனில் நேரடியாகத் தான் வந்து ஓட்டுப் போட வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.