இதுகூட வரலாறு படித்தவருக்கு தெரியாதா என பிரதமர் மோடியை கலாய்த்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ``நமது பாதுகாப்புத்துறையில் முதல் பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர். விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன்" எனக் குறிப்பிட்ட அவர், ``இந்தியாவின் 130 கோடி மக்கள்தான் என் குடும்பம். நான் அவர்களுக்காக வாழ்வேன், அவர்களுக்காக வீழ்வேன். நான் எந்தக் குடும்பத்துக்காகவும் அரசியல் செய்யவில்லை" எனப் பேசினார். இவரின் இந்தப் பேச்சை தான் தற்போது காங்கிரஸ் கட்சி கலாய்த்துள்ளது.
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அவர் 1975 ஆம் ஆண்டு மற்றும் 1980 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1982 ஆம் ஆண்டு வரை என மொத்தம் இரண்டு முறை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இப்படி இருக்க நேற்றைய கூட்டத்தில் நிர்மலா சீத்தாராமன் தான் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என பேசினார். கூடவே, அவரது பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்திலும் இது பதிவிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த காங்கிரஸ் கட்சி, ``பிரதமர் மோடி தவறான தகவலை தந்துள்ளார். இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை பெண் அமைச்சர் இந்திரா காந்தி. பிரதமர் தன்னுடைய வரலாற்று அறிவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் பட்டம் பெற்றதாக கூறும் மோடி படிக்கும் போது இந்த பாடத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார் போலும்" எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளது.