மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் பலர் தங்கள் மனைவிகளை கைவிட்டதாக தொடர்ந்து மத்திய அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. புகார்கள் அதிகமாக இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த ஆரம்பித்தது. இந்த புகார்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை, தனியார் அமைப்புகள் உதவியுடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் மனைவியை ஏமாற்றியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 45 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் மனைவிகளை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் வாழ்வது உறுதி செய்யப்பட்டது. இந்த 45 பேரின் பாஸ்போர்ட்டும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ``இந்த 45 வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் மனைவிகளை கைவிட்டுள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட்கள் உடனடியாக முடக்கப்பட்டன. மேலும் இவர்கள் அனைவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. பெண்கள் தேசிய ஆணைய அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,244 பெண்கள் வெளிநாட்டில் வாழும் தங்கள் கணவர்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடுகளை தவிர்க்க மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதா வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இனி இந்த தவறுகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்" எனக் கூறியுள்ளார்.