மருத்துவம் படிக்க விரும்புவதாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய அப்சல் குரு உள்ளிட்டவர்கள், பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தேதியான பிப்ரவரி 14 அன்று அவர் நினைவாக பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு புல்வாமாவில் தற்கொலைப்படைதாக்குதல் நடத்தியது. அதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தற்போது அப்சல் குருவின் மகன் காலிப் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் தனது தாயுடன் வசித்து வரும் காலிப், ``தனக்கு இந்த ஆதார் அட்டை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எனக்கு பாஸ்போர்ட் மட்டும் கிடைத்துவிட்டால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். என் தந்தையால் மருத்துவர் பட்டத்தை பெற முடியவில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் நான் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறேன். இதனால்தான் நீட் பயிற்சி எடுத்து வருகிறேன். ஒருவேளை நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் துருக்கியில் உள்ள கல்லூரியில் ஸ்காலர்ஷிப்புடன் படிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. என்னிடம் ஆதார் அட்டையும் உள்ளது. என்னுடைய மருத்துவ படிப்புக்கு இது பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
என்னையும் தீவிர வாத இயக்கத்தில் இணைக்க பல அமைப்புகள் முயற்சி செய்தன. ஆனால் எனது தாயார் தபசூம் அதற்கு இடம் அளிக்கவில்லை. என்னை தீவிரவாதக் குழுக்களின் பார்வையில் இருந்து அவர் தனித்து வைத்தார். நான் மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன். எனது தாய் விரும்பிய படி இந்திய குடிமகனாக வாழவே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். காலிப்பின் இந்த கோரிக்கைக்கு வலைதளங்களில் ஆதரவுகள் பெருகி வருகின்றன. பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.