புதுடெல்லி: ‘பத்மாவத்’ படத்திற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதை அடுத்து, வரும் 29ம் தேதி விசாரணை நடைப்பெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தி நீதிபதிகள் படத்தை வெளியிட தடை இல்லை எனவும் அறிவித்தனர்.
இந்நிலையில், பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக்கூறி மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையின் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் மனோகர் லால் சர்மா, இந்த விவகாரம் மிக மிக சிக்கலான பிரச்னை என்றும் அதனால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும் எனவும் கூறினர்.